பக்கம் எண் :

896 திருமுறைத்தலங்கள்


     கோட்டூர் சோழநாட்டு (காவிரி)த் தென்கரைத் தலம்.

     திருமுறைத்தலம். கோட்டூர், (1) மேலக்கோட்டூர் (2) கீழ்க்கோட்டூர் என
இரு பிரிவாகவுள்ளது. மேலக்கோட்டூரிலுள்ள திருக்கோயில் திருமுறைப்
பாடல் பெற்றது. கீழ்க்கோட்டூரில் உள்ள திருக்கோயில்தான் திருவிசைப்பாத்
தலம். இதுவே மணியம்பலம் எனப்படும். ஐராவதம் வழிபட்ட
பெருமையுடையது மேலக்கோட்டூர்ச் சிவாலயம். அந்த ஐராவதத்தின் மணி
விழுந்ததால் கீழ்க் கோட்டூர்ச் சிவாலயம் மணியம்பலம் என்று பெயர்
பெற்றது.

     திருத்துறைப் பூண்டி - மன்னார்குடிப் பாதையில் “திருப்பத்தூர் பாலம்”
என்னுமிடத்தைத் தாண்டி மேலும் 1 கி.மீ. சென்றால் கோட்டூர்த் தலத்தை
அடையலாம்.

     முதலில் வருவது திருமுறைப்பாடல் பெற்ற ஆலயம்தான்.
(மேலக்கோட்டூர்) கோயிலின் முன்பு வளைவு உள்ளது. அதைத்தாண்டி சற்று
உள்ளே சென்றால் கீழ்க்கோட்டூர் மணியம்பலம் கோயிலை அடையலாம். வழி
விசாரித்துச் செல்ல வேண்டும். கருவூர்த்தேவரின் திருவிசைப்பா பதிகம்
பெற்றது.

     இறைவன் - மணியம்பலநாதர், அமுதலிங்கேஸ்வரர்
     இறைவி - மணியம்பலநாயகி, அமுதாம்பிகை, மதுரவசனாம்பிகை.
     தலமரம் - வன்னி
     தீர்த்தம் - இந்திரதீர்த்தம்
     பிரமன், ஐராவதம் வழிபட்ட தலம்.

     ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. முன்புள்ள பலிபீடமும்
நந்தியும் தரிசனம் தர, உட்சென்று வௌவால் நெத்தி மண்டபத்தில் நின்று
பார்த்தால் நேரே மூலவர் காட்சியளிக்கிறார். வலப்பால் மதுர
வசனாம்பிகையின் அழகிய கோலம்.

     மூலவர் சிறிய அழகான மூர்த்தி. உள்ளங்குளிரத் தரிசித்து
மணியம்பலத்தாடும் மைந்தனோடு மனங்கலந்து மெய்ம்மறக்கின்றோம்.
மெள்ளவே அவன் பேர் விளம்பி மேனிசிலிர்க்க வழிபடுகிறோம்.

    சிறிய கோயில். பிராகாரத்தில் விநாயகர் சுப்பிரமணியர் சந்நிதிகள்
உள்ளன. தலமரம் வன்னி உள்ளது.