மானாச்சேரி (மாராச்சேரி) பாதையில் 3 கி.மீ. சென்றால் திருமுகத்தலை - பன்னத்தெரு கோயிலை அடையலாம். மணல்பாதை Single Road தான். பெரிய பேருந்துகள் சற்று கவனமாகச் செல்ல வேண்டும். மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் அருளாட்சிக்குட்பட்ட திருக்கோயில். முகலிங்கம், பண்டைநாளில் முகத்தலைலிங்கம் என்றும் வழங்கப்பட்டு வந்தது. அம்முகத்தலைலிங்கம் அமைந்துள்ள தலம். இதுவே பிற்காலத்தில் முகத்தலை என்றாயிற்று என்பர். இதற்கேற்ப கோயிலின் உட்பிராகாரத்தில் முகலிங்கம் ஒன்றுள்ளது. கோயில் சாலையோரத்திலேயே ஊர்த்தொடக்கத்திலேயே உள்ளது. கோயிலுக்கு வெளியில் உள்ள பகுதி ‘முகத்தலைக் கோட்டகம்’ எனப்படுகிறது. கருவூர்த்தேவரின் திருவிசைப்பா பதிகம் பெற்றது. இறைவன் - பன்னகாபரணேஸ்வரர் இறைவி - சாந்தநாயகி தலமரம் - புன்னை, கோயிலுக்கு எதிரில் திருக்குளம் உள்ளது. பன்னகாபரணேஸ்வரர் வீற்றிருக்கும் தலமாதலின் பன்னத்தெரு என்று ஊருக்குப் பெயராயிற்று என்பர். சிறிய கோயில், சுற்றிலும் பசுமையான சூழல், முகப்பில் சிமெண்டு கூரை போடப்பட்டுள்ளது. முன்னர் நந்தி, பலிபீடம் உள்ளன. நேரே பார்த்தால் மூலவர் தரிசனம் கிடைக்கிறது. முன்மண்டபத்தில் வலப்பால் புன்னை (தல) மரம் உள்ளது. மரத்தின்கீழ் விநாயகர் எழுந்தருளியுள்ளார். வாயிலைத் தாண்டி பிராகாரத்தில் சென்றால் (இடப்பக்கமாக) பூச்செடிகள், வாகன அறை. அடுத்து விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள், திருமுகத்தலைநாதர் என்னும் சிவலிங்கமூர்த்தம் (முகத்தலை லிங்கம்) காட்சியளிக்கிறது. பக்கத்தில் மகாலட்சுமி, அடுத்து பைரவரும், சனி பகவானும், சம்பந்தர், சுந்தரர், அப்பர் சந்நிதிகள் உள்ளன. வலம்முடித்து, வௌவால் நெத்தி மண்டபம் புகுந்து உட்சென்றால் வலப்பால் அம்பாளின் - சாந்தநாயகியின் அற்புத தரிசனம் கிடைக்கிறது. நின்ற திருக்கோலம் - மனத்திற்குச் சாந்தி தரும் காட்சி. நேரே மூலவர் - பன்னகாபரணேஸ்வரர், பெயருக்கேற்ப வெள்ளி நாகாபரணம் சார்த்தப்பட்டுப் பிரகாசிக்க ஒளிர்விட்டுக் காட்சியளிக்கிறார். |