பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 919


பிற்சேர்க்கை

1. பாடல் பெற்ற கோயில்
கண்டுபிடிப்பு

     இதுவரை ஞானசம்பந்தப் பெருமானால் தேவாரத்தில் பாடப்பெற்ற
திருநெற்குன்றம் என்ற தலம் எங்கு உள்ளது என்று தெரியாமலேயே
இருந்தது. திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புள்ளம்பாடிக்கு அருகில்
தற்போது திண்ண குளம் என்று அழைக்கப்படும் ஊரே திருநெற்குன்றம்
என்பது. இவ்வூர்க் கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் மூலம் இப்போது
தெரியவந்துள்ளது.

     புள்ளம்பாடி - திருமழபாடி சாலையில் புள்ளம்பாடியிலிருந்து 10 கி.மீ.
தொலைவில் திண்ணகுளம் அமைந்துள்ளது. இவ்வூருக்கு விரகாலூர் வழியே
செல்லவேண்டும்.

     இவ்வூரில் நெற்குன்றநாதீசுவரர் என்று சிவாலயம் இருக்கிறது. அம்மன்
பெயர் ஸ்ரீ குந்தளாம்பிகை. இக்கோயிலின் சுவர்களில் இருபதுக்கும்
அதிகமான கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை முதலாம்
ராஜேந்திரன் (1012-1044) முதல், மூன்றாம் ராஜராஜன் (1216-1257) வரையிலான
பல சோழ மன்னர்களும் கிருஷ்ண தேவராயரும் ஆண்ட காலத்தைச்
சேர்ந்தவை. கல்வெட்டுகள் ஊரின் பெயரைத் திருநெற்குன்றம் என்றும்,
இறைவன் பெயரைத் திருநெற்குன்றம் உடைய நாயனார் என்றும் தெளிவாகக்
குறிப்பிடுகின்றன.

     சம்பந்தப் பெருமான் க்ஷேத்திரக் கோவையில் 9-வது பாடலில்
“நெற்குன்றமோதூர் நிறைநீர் மருக நெடுவறையில் குறும்பவர் நீடு
திருநெற்குன்றம் வலம்புரந் நாகேச்சுரம் என்று தலங்களின் பட்டியலில்
இவ்வூரைக் குறிப்பிட்டுள்ளார். இக்கோயில் பல்லவர் காலத்திலேயே இருந்தது
என்பதற்கு இந்த ஞானசம்பந்தர் பதிகமும் இவ்வூர் வரதராஜப் பெருமாள்
கோயிலில் காணப்படும் பல்லவர் காலச் சிங்க முகத் தூணும் சான்றுகளாகும்.

     நூறு ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பணி செய்யப்பட்ட இச்
சிவாலயத்தில் இதுவரை படியெடுக்கப்படாத இந்த அரிய கல்வெட்டுக்களைப்
படியெடுக்கவும் தேவாரப் பாடல் பெற்ற இக்கோயிலைப் புதுப்பிக்கவும் அரசு
முன்வர வேண்டும்.

                               செய்தி ஆதாரம் :-
                  டாக்டர். இல.தியாகராஜன், அரியலூர்
                          (தினமணி நாளிதழ் 10-7-1990)