பக்கம் எண் :

920 திருமுறைத்தலங்கள்


2. வழுவூர்

     சோழநாட்டுத் தலம். மயிலாடுதுறை - திருவாரூர்ப் பேருந்துச்
சாலையில், மங்கநல்லூருக்கு முன்னால் ‘வழுவூர் பெயர்ப் பலகை’ உள்ள
இடத்தில் திரும்பி, 2 கி.மீ. சென்றால் இவ்வூரை அடையலாம். கோயில் வரை
பேருந்தில் செல்லலாம். அட்ட வீரட்டத் தலங்களுள் இதுவும் ஒன்று. வழுவூர்
வீரட்டம் என்றழைக்கப்படும். இது பாடல் பெற்ற தலமன்று.

     தாருகாவனத்து முனிவர்கள் இறைவனுக்கு எதிராகச் செய்த ஆபிசார
வேள்வியில் தோன்றிய யானையை, இறைவன்பால் ஏவிட, இறைவன் அந்த
யானையை அழித்துத் தோலைப் போர்த்து அருளிய வரலாறு இத்தலத்திற்கு
வீரச் செயலாகும். இத்தலத்துக்குரிய மூர்த்தி ‘கஜசம்ஹாரமூர்த்தி’ யாவார்.

     ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது - கிழக்கு நோக்கியது.
அழகான ராஜகோபுரம். கோயிலின் முன்பு பஞ்சமுக தீர்த்தம் எனப்படும்
குளம் உள்ளது. விசாலமான உள் இடம். உள்ளே நுழைந்தால் நந்தியும்,
முன்னால் விநாயகரும் உள்ளனர். அடுத்துள்ள உள்வாயிலைத் தாண்டின்
வீரட்டேஸ்வர சுவாமி தரிசனம்.

     துவார கணபதி, துவாரசுப்பிரமணியரை வணங்கி, வாயில் நுழைந்ததும்
கவசமிட்ட கொடிமரம் உள்ளது. கொடி மரத்து விநாயகர் உள்ளார். கொடி
மரத்தின் வலப்பால் சஹஸ்ரலிங்கமும், வலக்கோடியில் நூற்றுக்கால்
மண்டபமும் உள்ளன.

     உள் வாயிலில் உள்ள துவார கணபதியையும், சுப்பிரமணியரையும்
வணங்கி, இருபுறமும் சுதையாலான துவாரபாலகர்களையும் தொழுது,
சென்றால் முன் மண்டபத்தை அடையலாம். உள் பிராகாரத்தில் வலம் வரும்
போது, வரிசையாக சண்டேசுவரர், விநாயகர், நால்வர், இரு கணபதிகள்,
தொடர்ந்து அறுபத்து மூவரின் மூல உருவங்கள், தல விநாயகர் ஆகியோர்
உள்ளனர். அடுத்து, ‘உமைமுருகுடையான் சந்நிதி’ உள்ளது. தொடர்ந்து
ஜேஷ்டாதேவி, நாகர்கள், பிடாரி, சப்தமாதர் வழிபட்ட லிங்கங்கள்,
பைரவர்கள் சந்நிதிகள் உள்ளன.

     அடுத்து வள்ளி தெய்வயானை சுப்பிரமணியரும், பக்கத்தில்
பாலசுப்பிரமணியரும், கஜலட்சுமியும் உள்ளனர். இவற்றையடுத்து பிராகாரச்
சுற்றில் விக்கிரமசோழன் அருள் பெற்ற வரலாறு, அழகான