| வண்ண ஓவியங்களாக எழுதப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களும் தற்போது அழிந்த நிலையில் உள்ளன. தொடர்ந்து பிராகாரத்தில் சனிபகவான், பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரகங்கள் உள்ளன. முன்மண்டபத்தில் வலப்பால் பிட்சாடனர் உருவம் உள்ளது. பெரிய அருமையான திருமேனி. பக்கத்தில் மோகினி உருவம் உள்ளது. வாயில் நுழைந்ததும் வலப்பால் ‘கஜசம்ஹாரமூர்த்தி’ தரிசனம் தருகின்றார். இம்மூர்த்தி மிகவும் அற்புதமானதும், அருமையானதும், வேறு எங்கும் காண முடியாத அழகும் வாய்ந்ததாகும். யானையின் தோலுரித்து, யானையை அழித்து, சிரசின் மீது சுற்றிய வண்ணம், இறைவன் வீர நடனமாடுகின்றார். யானையின் வால்புறம் சிரசின் மீது தெரிகிறது. திருமேனி ஓங்கார வடிவில் அமைந்துள்ளது. கைவீசி திருவடிகள் முருக்கியவாறு, மடித்து, திருவடியின் உட்புறம் (புறங்கால் பகுதி) தெரியுமாறு நடனமாடும் அற்புதமே அற்புதம். புறங்கால் தரிசனத்தை இங்கு, இம்மூர்த்தியில் கண்டு தொழுது களிக்க முடிகிறது. இம்மூர்த்தியின் அழகை எவ்வளவு வருணித்தாலும் நிறைவுறாது - நேரில் கண்டு தொழுவதாலேயே நிறைவு பெறும். இத்திருமேனிக்குப் பக்கத்தில் அம்பாளின் திருமேனி அதியற்புதத்தோடு திகழ்கின்றது. ஒரு பாதத்தைச் சற்று திருப்பி, நடந்து செல்ல முயலும் கோலத்தில் உள்ளது. அம்பாளின் இடுப்பில் முருகப் பெருமான் காட்சி தருகின்றார். அவருடைய ஒரு விரல் பக்கத்தில் உள்ள மூர்த்தியைச் சுட்டிக் காட்டும் அமைப்பில் உள்ளது. இதுவும் உற்று நோக்குவார்க்கு உள்ளூற மகிழ்ச்சியளிப்பதாகும். இவை பற்றிச் சொல்லப்படும் வரலாறு வருமாறு :- “ஆபிசார வேள்வியில் வந்தெழுந்த யானை, இறைவனை நோக்கி உக்கிரத்தோடு ஓடி வந்தபோது, அதையழிக்க வேண்டி, இறைவன், ‘அணிமா’ சித்து மூலம் அவ்யானையின் உடலுள் புகுந்தார். அப்போது உலகமெல்லாம் இருண்டது. அம்பிகை அஞ்சினார். செய்வதறியாது திகைத்தார். இறைவன் தன்னுள் புகுந்ததால், தாளாத யானை, தீர்த்தத்தில் - பஞ்சமுக தீர்த்தத்தில் போய் விழுந்தது - வடகிழக்கு மூலையில் விழுந்தது. இறைவன் அதையழித்துத் தீர்த்தத்தின் தென்மேற்கு மூலையில் எழுந்து வந்தார். தன் கணவன் இல்லாமையால், வழியின்றித் திகைத்த அம்பிகை, தன் தந்தை வீட்டிற்குச் செல்வதற்கு முயன்றார். அப்போது இறைவன் எழுந்து வெளிப்படவே, குமரனாகிய முருகப் பெருமான், தன்தாய்க்கு, ‘இதோ தந்தையார்’ என்று சுட்டிக் காட்டினாராம். |