(வீட்டிற்குச் செல்ல புறப்படும் நிலையில் திருவடியைத் திருப்பி நிற்கும் அம்பிகையின் நிலையும், தந்தையைச் சுட்டிக் காட்டும் அமைப்பில் இடுப்பில் உள்ள முருகனின் அமைப்பும் கண்டு வியத்தற்குரியது) இச்சந்நிதியைத் தரிசித்தவர்க்கு வெளியே வர மனம் வாராது. எவ்வளவு அற்புத நிலை. வெளியே வந்தால் நேரே மூலவர் தரிசனம். கிழக்கு நோக்கியது, சுயம்புத் திருமேனி. நாககவசத்தில் தரிசிக்க மிகவும் அருமை. இறைவன் - வீரட்டேஸ்வரர், கஜசம்ஹாரமூர்த்தி, கஜாரி, கிருத்திவாசன், ஞானசபேசன். இறைவி - பாலகுஜாம்பிகை, இளமுலை நாயகி. தலமரம் - தேவதாரு. தீர்த்தம் - பஞ்சமுக தீர்த்தம். சுவாமி சந்நிதிக்கு இடப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. தனிக்கோயில், அம்பாள் நின்ற கோலம், அபய வரதத்துடன் கூடிய அட்சமாலை, பத்மம் ஏந்திய நான்கு திருக்கரங்கள். ஆலயத்தில் நாடொறும் ஆறுகாலபூஜைகள் நடைபெறுகின்றன. நீதியான வழக்குகள் தீர, திருமணம் நடைபெற, புத்திரப்பேறு தர இத்தலம் சிறந்த பிரார்த்தனை இடமாகக் கருதப்படுகிறது. சுவாமி மண்டபத்தில் அட்ட வீரட்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மாசி மகத்தில் பெருவிழா, திருவாதிரை, பத்து நாள்களுக்கு மாணிக்கவாசகர் திருவிழா, நவராத்திரி முதலிய விழாக்கள் நடைபெறுகின்றன. நாட்டிய கலைஞர் வழுவூர் திரு.இராமையாப் பிள்ளை இத்தலத்தைச் சேர்ந்தவரே. “கொல்லுங் களியானை உரிபோர்த்து உமையஞ்ச நல்ல நெறியானை நல்லூர்ப் பெருமானைச் செல்லு நெறியானைச் சேர்ந்தார் இடர்தீரச் சொல்லும் அடியார்கள் அறியார் துக்கமே” (திருநல்லூர் : சம்பந்தர்) “விரித்த பல்கதிர் கொள்சூலம் வெடிபடு தமருகங்கை தரித்ததோர் கோலகால பயிரவனாகி வேழம் உரித்து உமையஞ்சக் கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச் சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே” (திருச்சேறை : அப்பர்) “மறிசேர் கையினனே மதமா உரிபோர்த்தவனே குறியே என்னுடைய குருவே உன் குற்றேவல் செய்வேன் நெறியே நின்றடியார் நினைக்குந் திருக்காளத்தியுள் அறிவே உன்னையல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே” (திருக்காளத்தி : சுந்தரர்) |