இப்பயணங்களில் அதிகம் வரும். ஆகவே ஓட்டுநர்கள் பயணம் செய்யும் அன்பர்களிடம் பரிவுடன் நடந்து கொள்ளவேண்டும். பயணத்திறகுப் பேருந்துகளை ஏற்பாடு செய்வோரும், நிறுவனங்களும் இத்தகைய மனவுணர்வுடைய ஓட்டுநர்களையே தங்கள் பயணத்திற்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். 7. உணவு, தரிசனம் முதலியவைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு செல்வோர் அவற்றிற்குரிய காலத்தை இயன்ற வரையில் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையெனில் காலத்தே உணவு கிடைக்காமற் போவதுடன், ஏற்பாட்டைச் செய்து வைப்போரும் இடர்ப்படுவர். 8. அன்பர்கள் மற்ற யாத்திரைகளைப் போல் இந்த யாத்திரையை எண்ணாமல், தரிசிக்கப்போகும் தலங்களுக்கு முன்கூட்டியே கடிதம் எழுதிவிட்டுச் செல்லுதல் வேண்டும். இல்லையெனில் நாம் செல்வதற்கு முன்பாகவே கோயில் சிவாசாரியார் வந்து சென்று விட்டிருந்தால் நம் பயணம் பயனளிக்காது போகும். (ஒரு குருக்கள், பல கோயில்களுக்குப் பூசைமுறை உடையவராயிருப்பர் என்பது நினைக்கத்தக்கது.) 9. வசதியுள்ள அன்பர்கள் திருக்கூட்டமாகத் தனிப்பேருந்தில் செல்வாராயின், தரிசிக்கப்போகும் தலங்களுக்கு முன்கூட்டியே குறிப்பிட்ட தொகையை அனுப்பிவைத்து, மூர்த்திகளுக்கு எண்ணெய்க்காப்பிட்டு, அபிஷேக அலங்காரம் செய்து வைக்குமாறு செய்யலாம். பல உட்புறக் கோயில்களில் மூர்த்தங்கள் எண்ணெய்க் காப்பு கண்டு பல காலம் ஆயினவே ! காணும்போது நெஞ்சு கலங்குகிறது. 10. பயணத்தின்போது அருச்சனைக்குரிய பொருள்களை எடுத்துச் செல்வதுடன் தீபாராதனையின்போது தட்டில் குருக்களுக்குத் தாராளமாகக் காணிக்கை இடுங்கள். பல உட்புறத் தலங்களை இன்றும் குருக்கள்தாம் காப்பாற்றி வருகின்றனர். இதை நேரில் கண்டறியலாம். ஆகவே இவர்களுக்கு ஆதரவு தருவது நம் கடமையாகிறது. நகரக் கோயில்கள் மக்கள் ஆதரவால் தாமாக வளரும். அதில் ஐயமில்லை. ஆனால் கிராமப்புறங்களிலுள்ள பாடல் பெற்ற பல கோயில்கள் காக்கப்பட வில்லையானால் அடுத்த தலைமுறைக்குச் சுவடு தெரியாமல் அழிந்துபோகும். பல இந்நிலையில் உள்ளன. இன்றும்; பக்தியினாலும் குடும்ப முறையினாலும் இக்கோயில்கள் பலவற்றைக் கோயில் சிவாசாரியார்களே காத்து வருகின்றனர். எனவே பிறிதொன்றையும் எண்ணாமல் கோயில்களைக் காத்துவரும் செய்கையொன்றையே எண்ணி அவர்களுக்கு உதவுவது நம் கடமையாகிறது. |