பண்பு கொண்ட ஆமினாதாய்
மாறாக் கற்பும் மணிநாவும் மதிக்கும் மானம் மடம் நாணும்
பேறாய்ப் பெற்ற அச்சமொடும் பிறப்புத் தூய்மை குடிநலமும்
நாறா மலர்போல் நங்கையரை நாடாப் பண்பும் மடவார்க்குக்
கூறா தமைந்த பண்பனைத்தும் கொண்டார் நங்கை ஆமினாவே 33
ஒளிநுதலும் பிறைநுதலும் ஒன்றின
இறைவன் அருளால் நிலைபெற்ற எழில்அப் துல்லா ஒளிநுதலும்
நிறைவான் ஆணை வழிமுறையே நெகிழ் ஆமீனா பிறைநுதலும்
மறைவாய் மொழிந்த மணியுரைதான் மண்மேல் திகழ ஒன்றினவே
கறைவாய் நின்ற நெஞ்சமெலாம் கனிவாய் ஓங்கிச் சிறப்புறவே! 34
நபியார் தாய் வயிற்றில் உருவானார்
நல்ல திங்கள் இரசபுவில் நாடும் முதலாம் நாளான
வல்ல வெள்ளி நள்ளிரவில் வாய்மை வழங்கும் அப்துல்லா
சொல்லார் சுடர்நன் னுதல்ஒளிதான் தூய மங்கை ஆமினாப்பொன்
நல்லார் கருவில் உருவாக நபியார் வந்து தங்கினரே! 35
இபுலீசு மனம் கொதித்தான்
தீய மனத்தான் இபுலீசு தீயை மிதித்தான் போலாகித்
தூய வானும் மண்ணுலகும் தொடர்ந்து மகிழும் நிலைகண்டான்
தாயை வெறுத்தான் தரைமீதில் தமிழை வெறுக்கும் தமிழர்போல்
நோயே உடைய மனத்தானாய் நொந்து நொந்து குலைந்தானே! 36
மோசம் வந்து விட்டதே!
இடியே தலைமேல் விழுந்ததுபோல் இடிந்து போனான் “இவ்வுலகைக்
கொடிய தாக்க நினைத்தோமே கொலை பொய் களவு தமை வளர்த்து
மடியச் செயவும் நினைத்தோமே மனிதர் தம்மை விலங்காக்க
முடியும் என்றும் நினைத்தோமே; மோசம் வந்து விட்டதென்றே; 37
அழுகிய பழத்தின் நிலை அடைந்தான்
விழுந்தான் குலைந்தான் தீமைஎலாம் விளைக்கும் கெட்ட மனமுடையான்
எழுந்தான் எனினும் உடல்நடுங்கி இயலா நிலையில் கீழ்வீழ்ந்தான்;
பழந்தான் அழுகிப் போய்விட்டால் பழிக்கும் குப்பை ஆவது போல்
இழிந்தான் நிலையும் அவ்வாறே இம்மண் தன்மேல் ஆனதுவே! 38
|