|
நம் எண்ணம் நிறைவேறாதே
துளிநஞ்சாக வையப்பால் தூய்மை கெடுக்க முன்வந்தோம்
ஒளிதான் முன்னே தோன்றுமெனில் ஒளிந்தே போகும் இருள்அன்றோ?
எளிதாய்த் தீமை இயற்றவந்தோம் எண்ணம் இனிமேல் செல்லாதே
வெளிமண் வளிதீ நீர்வணங்கும் வேந்தர் கருவில் உறைந்தாரே! 39
இபுலீசைப் பிரிந்தனர்
இவ்வா றெல்லாம் கலங்கியவன் இபுலீசு என்னும் தீயவனை
எவ்வாறு இனிநாம் நம்புவதோ என்று நினைத்த அவன்தோழர்
ஒவ்வா தினிமேல் இவன் நட்பும் உதவா தென்றே எண்ணினராய்ச்
செவ்வான் நெறியின் சிறப்பெண்ணிச் சிந்தை மாறிப் பிரிந்தனரே! 40
ஒவ்வொரு மாதமும் கனவில் நபியார்கள் தோன்றினர்
இனியார் ஆதம் இதுரீசும் எழிலார் நூகு இபுராகீமும்
நனிசீர் அம்மை ஆமினாவின் நல்ல கனவில் தோன்றிஒவ்வோர்
கனியும் மாதந் தொறும் நல்ல கருத்துக் கூறி வந்தார்கள்
தனிச்சீர் நபிகள் நாயகத்தின் தம்பேர் முகம்மதென்றாங்கே. 41
பூ முடித்தனர்
ஐந்தாம் திங்கள் ஆனதனால் அரிய உற்றார் பெற்றவர்கள்
பைந்தார் மேனி ஆமினாவின் பக்கு வத்தை அறிந்தவுடன்
மைந்தார் பெருமான் முகம்மதுசீர் மணிசார் வயிற்றின் நலம்எண்ணிக்
கொய்ந்தார் மலர்க்கை மடவார்கள் கொத்துப் பூக்கள் முடித்திடவே! 42
மங்கையர்கள் மகிழ்ந்தனர்
மண்கல் தேய்த்துப் பொட்டிட்டு மங்கை யர்கள் மகிழ்ந்தார்கள்;
பெண்கள்கூடிக் குளிப்பாட்டிப் பெருமை கொண்ட ஆமினாவின்
கண்கள் பொலிய மைதீட்டிக் கைகால் மஞ்சள் முகம்பூசிப்
பண்கள் பாடிப் பலவண்ணம் படைத்த பூவின் நிரைசூட்டி; 43
கண்ணேறு கழித்தார்கள்
அருஞ்சூல் கொண்ட அம்மையாரை அழகாய் அமர வைத்தார்கள்;
மருந்தும் கண்ணும் படுமென்று வாழ்த்துப் பாடித் தொழுதார்கள்;
பெருந்துன் பங்கள் பிழையேதும் பின்னால் தோன்றா நெறிகாக்கும்
திருந்து மைப்பொட் டிட்டார்கள் தீக்கண்ணேறும் கழித்தார்கள்; 44
|