பக்கம் எண் :

12துரை-மாலிறையன்

தோழியர்கள் தொழுதார்கள்

நங்கை யர்கள் நலங்கூறி நற்றேன் இசையே பொழிந்தார்கள்;
செங்கை யாலே சாந்தத்தைச் சிறக்கப் பூசிக் களித்தார்கள்;
அங்கை வளையல் அவைபூட்டி அழகைப் பார்த்துச் சுவைத்தார்கள்;
“தங்கக் கட்டி சுமக்கின்ற தாயே!” என்று தொழுதார்கள்; 45

சுவைப் பண்டங்கள் தந்தார்

சுவைசேர் பண்டம் பல வைத்த தூய இலைகள் நிரையிட்டுத்
தவறில் லாத இனிப்புவகை தட்டில் வைத்து மறுபக்கம்
குவைசேர் காரப் பண்டங்கள் கூட்டி வைத்துக் குழந்தைகள்தாம்
எவர்எங் குள்ளார் எனக் கூவி எல்லார் தமக்கும் கொடுத்தாரே! 46

இறைவனைத் தொழக் ககுபா இல்லம் சென்றனர்

சூல்வைத் தெல்லாம் முடிந்தாலும் சோர்வில் லாத ஆமினாதம்
பால்வாய் மையுள ஆயமுடன் பற்றுக் கொண்டு ககுபாபோய்
நால்வகையாய் உருவிருந்தும் நாடா தவற்றை நினையாமல்
மேல்வான் ஒருவன் இறைவனையே மேவித் தொழுது நின்றார்கள். 47

உருவங்கள் சிதைந்து விழுந்தன

உருவம் பலவாய் இருக்க அதில் ஒன்று தவறி உருண்டுவந்து
பொருவில் லாத ஆமினாவின் பொன்தாள்பட்டுக் கிடந்ததுவே;
“திருவின் குறையோ? செயலிதனால் தேடி வருமோ தீவினைகள்?
வருவ தெதுவோ?” எனக் கலங்கி வந்தார் இல்லம் ஆமினாவே! 48

ஆறாம் மாதம் கனவு தோன்றியது

திங்கள் ஐந்தும் ஆனதனால் தீராக் கனவில் இசுமாயில்
நங்கை யார்முன் தோன்றிநபி நல்லோர் சிறப்பைக் கூறிஅவர்
பங்குக் கேற்ற முகம்மதுவாம் பணியும் பேரைச் சொலஆறாம்
திங்கள் வரவும் அவ்வாறே தேடிக் கனவும் வந்ததுவே. 49

மூசா நபி தோன்றினார்

கனவில் மூசா நபி தோன்றிக் “கனியை ஏந்து காரிகையே!
முனைவர் அன்பு முகம்மதுவே முன்னோர்க் கெல்லாம் மன்னவராம்”
எனவே கூறி மறைந்துவிட எல்லாம் கேட்ட ஆமினாதாய்
நினைவில் இறைவன் அருள்ஒன்றே நிலைக்க எண்ணி வாழ்கையிலே; 50