அப்துல் முத்தலிப்பு தம் மகனை நோக்கி
தந்தை அப்துல் முத்தலிப்பு தம்சீர் மகனாம் அப்துல்லா
சிந்தை பொருந்தும் சிலசெய்தி செப்ப அருகில் அழைத்து “இனிய
மைந்தா! மண்ணில் நம் வாழ்க்கை மலர வேண்டும் எனநினைத்தால்
நந்தாச் செல்வம் நம்கையில் நாம்பெற்றால்தான் நலமாகும்; 51
நன்கு வாழப் பொருள் வேண்டும்
பொருளின் சிறப்பை உரையாத புகழ்நூல் ஒன்றும் இங்கில்லை
அருளின் துணையால் வாழ்வோர்க்கும் ஆய்ந்து பார்த்தால்
பொருள்வேண்டும்
இருளே ஆகும் இல்வாழ்க்கைக்கு ஏற்ற பொருளே இலையானால்
அருளில்லார்க்கு அவ்வுலகில்லை அதுபோல் புவிக்குப் பொருள்வேண்டும்”
வணிகம் புரியப் புறப்படுக
“வணிகம் புரிந்து பொருள்சேர்க்க வாட்டமின்றிப் புறப்படுக
துணிவாய்” என்ற தந்தையின்சொல் தூயமந்தி ரமாய்க் கொண்டு
பணிவாய் வணங்கி அப்துல்லா பயணம் தன்னை மேற்கொண்டார்
பிணிவாய்க் குதிரை மேலேறிப் பெருமை அடைய நினைத்தவரே! 53
வணிகம் புரிந்து அபுவா நகருக்கு வந்தார்
கொண்டு போன பொருளைஎலாம் கொடுத்து நல்ல விலைபேசிக்
கண்ட அரிய பொருள்வாங்கிக் கட்டி எடுத்துக் கொண்டவர்கள்
வண்டார் சோலை மக்காவூர் வந்து சேரப் புறப்பட்டார்;
உண்டாம் வழியில் அபுவா என்(று)உரைக்கும் ஓர்ஊர் சிற்றூராம்; 54
இருபத்தைந்தாம் வயதில் அப்துல்லா மறைவு
இருபத் தைந்தே ஆண்டுடைய இளமை குன்றா அப்துல்லா
பெருகும் ஆர்வால் அவ்வூரில் பிழையே இன்றிப் புகுந்தாலும்
திருவான் ஊழின் வலிமையால் தீமை உடலில் வந்ததனால்
அருவான் உலகம் அடைந்தார்கள் ஆரும் இல்லா வேளையிலே! 55
ஆமினா தாய் செய்தி அறிந்தார்
கூடி வந்த வணிகர்கள் கோமகனாரின் புகழ் மெய்யை
நாடி அடக்கம் புரிந்ததன்பின் நல்லூர் மக்கா அடைந்தார்கள்;
“ஈடில் லாத பொருள்கொண்டே இனியார் வருவார்” எனஇருந்த
பீடு மிகுந்த ஆமினாதாய் பெரியார் முன்னர்ப் போய்நின்றே! 56
|