பக்கம் எண் :

14துரை-மாலிறையன்

கீழ்விழுந்து புலம்பினார்

நடந்த எல்லாம் நடந்தபடி நல்லார் கேட்க எடுத்துரைக்கப்
படர்ந்த கொடிதன் பக்கத்துப் பசுமைக் கொம்பு சாய்ந்ததுபோல்
உடனேகலங்கி நிலைகுலைந்தே ஓயாதரற்றிப் புலம்பிக் கீழ்க்
கிடந்த போது சிறகிழந்த கிளிபோல் துவண்டு துடித்தாரே! 57

அப்துல் முத்தலிப்பு ஆறுதல் கூறினார்

“கடவுள் செயலால் எச்செயலும் கண்முன் எல்லாம் நடந்துவிடும்
நடவா எல்லாம் நடப்பனவாம் நடக்கும் என்ப நடவாவாம்
நடந்த தெண்ணி வருத்தமுறல் நல்லோர் நந்தம் செயலில்லை
விடுங்கள் துயரம்” எனஉரைத்தார் வெல்லும்அப்துல் முத்தலிப்பே! 58

ஏழாம் திங்கள் தாவூது கனவில் வந்தார்

ஏழாம் திங்கள் தோன்றியதும் எழில் ஆமினாவின் கனவுதனில்
தாழ்வில்லாத தாவூது தாமே தோன்றி, “நல்லாரே
பாழும் பாவம் நீக்கிடவே பரமன் தூதர் இவ்வுலகை
வாழ வைக்கும் நோக்கமுடன் வருகை தரவே இருக்கின்றார்; 59

எட்டாம் மாதம் கனவு தோன்றியது

அவர்க்கு நற்பேர் முகம்மதுவே ஆக வைத்துப் பகர்க” எனத்
தவறில்லாதார் சென்றவுடன் தகுந்த எட்டாம் மாதமதில்
நவையில் சுலைமான் நபியவர்கள் நங்கை கனவில் தோன்றியவர்
நவின்றார், “அன்பீர் உம் வயிற்றில் நல்லார் நபியார் இருக்கின்றார்; 60

ஒன்பதாம் மாதம் தொடங்கியது

அதுனான் குலத்துப் பிள்ளையவர் அரும்பேர் முகம்மது என்பதுவே
இதனை எண்ணி மகிழுங்கள்” என்று கூறி மறைந்தார்கள்
மதிபோல் முகங்கொள் ஆமினாதாய் மணிச்சீர் வயிறு ஒன்பதுமாதம்
முதுமை பெற்ற நிலைகொண்ட முழுநன் னாள்ஓர் இரவுதனில்; 61

ஈசா நபிகள் தோன்றினார்

சேயாய்த் திகழ்ந்த பருவத்தில் செம்மை யாகப் பேசியவர்;
தாயாய் மரியம் நல்லாரின் தகுதி உயர்த்தி வைத்தநபி
நோயார் தம்மை நலமாக்கி நொடியில் செத்தார் தமைஎழுப்பித்
தூயாராக விளங்கியவர் தோன்றல் ஈசா நபியவரே! 62