ஈசா நபிகளின் சிறப்பு
தசை என்பான் உடலுடனே தகுவான் அடையும் அருள்பெற்றார்;
இசையும் வான்போய் மீண்டுவரும் இனிய வரமும் தாம் பெற்றார்;
அசையா நெஞ்சில் அன்புள்ள அனைவருக்கும் நலம்செய்தார்
நசையார் ஈசா என்னும்ஒரு நபியார் அந்நாள் அவ்விரவில்; 63
முகம்மது என்று பெயர் சூட்டுங்கள்
மங்கை யாரின் கனவுதனின் மணியார் ஒளிபோல் தோன்றியவர்
“செங்கை நல்லீர்! உம் வயிற்றில் செம்மல் நபியார் உறைகின்றார்
எங்கும் எவரும் போற்றுமறை இறைவன் அருளால் இயம்பிடுவார்
இங்கே அவர்பேர் முகம்மதுவே!” என்றே கூறி அவர்மறைந்தார். 64
கனவில் நபிமார்கள் வந்தனர்
பல்லார் நபிகள் பகர்ந்தது போல் பார்க்க வந்த வானோர்கள்
நல்லார் ஒவ்வோர் நாள்கனவும் நலமே அடையச் சொன்னவெலாம்
இல்லார் பெற்ற செல்வத்தை எண்ணிப் பெருமைப் படுவதுபோல்
மெல்லியலார்பொன் ஆமினாவும் விளம்பிப்பெருமை கொண்டாரே. 65
சபா என்னும் பெண் உதவினார்
பத்தாம் மாதம் முற்றிவரப் பாவை மெய்யில் கருவதனால்
எத்தன் மையாம் மாற்றமதும் எள்ளத் தனையும் தெரியாமல்
முத்துத் தன்மை ஒளிபெற்றே முழுதும் சிறந்து திகழ்ந்தார்கள்
ஒத்து வந்தார் சபாஎன்னும் ஒருவர் ஆங்கே உதவிடவே! 66
மக்காவினர் உதவவில்லை
மதினா மங்கை ஆமினாவை மணந்த தாம்கா ரணத்தாலே
இதுநாள் வரையில் மக்காவில் இருந்தோர் எல்லாம் வெறுத்தார்கள்;
முதிர்ந்த கருவின் தாயார்க்கும் முன்னே வந்து உதவிசெய
எதிரில் எவரும் வரவில்லை எல்லாம் பழித்துச் சொன்னார்கள்; 67
“இறைவனே துணை” என வேண்டினார்
மன்னர் அப்துல் முத்தலிப்பும் மன்றாடித்தாம் அழைத்தாலும்
புன்மை யர்கள் மறுப்புரையே புகன்று பகைமை புரிந்தார்கள்;
தன்மை யில்லா தவர்முன்னே தாழ்ந்து நின்று கேட்பதிலும்
நன்மை இறைவன் தருவனென நயந்து ககுபா அடைந்தனரே! 68
|