பக்கம் எண் :

16துரை-மாலிறையன்

தனியே கிடந்து தவிக்கின்றோம்

“கனியே! அன்புக் கனி அமிழ்தே! கனிவே நிறையும் கார்முகிலே!
தனியே கிடந்து தவிக்கின்றோம் தகவே அருள்க” எனக்கதறி
இனிய இறைவன் முன்னின்றே இயம்பி வணங்கி முறையிட்டார்
பனிபோல் சொல்லே பகர்கின்ற பண்பார் அப்துல் முத்தலிப்பே! 69

வானோர் உதவினர்

கேளாருக்கும் தருகின்ற கெழுநல் லியல்பான் கேட்டார்க்குக்
கேளா தவனாய் இருப்பானோ? கேள்போல் உதவ வானோரை
ஆளாய் இருந்து நலம் புரிய அனுப்பி வைத்தான் பல்லோரைத்
தோளாய்த் துணையாய்த் தோழர்களாய்த் தோன்றி வானோர் உதவினரே;70

வான்சுவை நீர் தந்து காத்தனர்

வலியே இன்றிப் பொலிவாக வானோர் சுவைநீர் தந்தார்கள்;
கலையே பொலிய நல்லாடை கட்டி வைத்தார் வானோர்கள்
இலையே காற்றும் எனஎண்ணி எழில்வான் பறவைச் சிறகாலே
தலைகால் முழுதும் விசிறிவிடத் தவழ்ந்தார் மண்ணில் அந்நாளே! 71

மரியம் அம்மையும் ஆசியாவும் உதவுதல்

கன்னித் தாயாய் ஆகிமனம் கனிந்த மரியம் அன்னையரும்
மன்னும் இறைவன் அருள்கொண்ட மணியாம் நங்கை ஆசியாவும்
விண்ணில் இருந்து விரைந்தேகி விளங்கு மணியாம் ஆமினாவின்
முன்னே இருந்து நல்லுதவி முறையாய்ச் செய்து வருகையிலே; 72

நபிகள் நாயகம் பிறப்பு

வரத்தொடும் பிறந்தார்

அறத்தொடு நண்பும் அகம்தொடும் அன்பும் அரும்புவி மீதினில் பாய
மறத்தொடு வன்பும் மலிந்திடு துன்பும் மனைதொறும் நீங்கியே வீயத்
திறத்தொடு வாழ்வு திருவொடும் துலங்கத் தீமைகள் யாவையும் மாய
வரத்தொடு வந்த வானகத் தூதர் முகம்மது நபிபிறந் தனரே! 73

ஆமினா வயிற்றில் தோன்றினார்

வாய்மையும் நெஞ்சத் தூய்மையும் மலர வரும் ஒளிக் கதிரினைப் போலத்
தாய்மையின் பரிவும் தலைமையின் தகவும் தாங்கிய புவிஒளி பெறவே
ஆய்மயில் ஆன ஆமினா வயிற்றில் ஆண்டவன் ஆணையின் படியே
தூயவர் தோன்றல் தூதராய் மண்ணில் தோன்றினர் முகம்மது நபியே! 74