பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்17


தானமும் தவமும் நிறையப் பிறந்தார்

மானமும் கற்பும் மன்னியே பொலிய மங்கையர் நோன்புகள் சிறக்க
வானமும் மண்ணும் வாழ்த்துகள் பரவ வாடிய நெஞ்சலாம் தழைக்கத்
தானமும் தவமும் தரையினில் நிறையத் தலைவர் அப்துல்லாவின் கனிவால்
ஆனவர் விண்ணின் ஆணையின் படியே அகம்மது நபிபிறந் தனரே! 75

குறைசியர் குலத் தோன்றல்

எண்ணிய நல்லோர் எண்ணமே போல எங்கணும் எழில்ஒளி மிளிரக்
கண்ணிய வாழ்வில் கடமைகள் மலியக் கருதிய - வினைநலம் பொலியப்
புண்ணியர் கதீசா பண்ணிய நோன்பால் புவியகம் நன்னிலை பெறவே
தண்ணியர் ஆன குறைசியர் குலத்தில் தகுநல நபிபிறந்தனரே! 76

அபூத்தாலிப்பு மனையில் பிறந்தார்

ஆண்டவன் தந்த அருமறை விளங்க அரியமானிடர்குலம் வணங்க
மாண்தவம் புரிந்த மக்கமா நகரில் மகிழ்அபூத் தாலிப்பு மனையில்
தூண்டொளி தொடரத் தூதரின் தோற்றம் தொடர்புவி யாவையும் புகழ
வேண்டிடும் மக்கள் வினை நலம் மிகவே வெல்முக நபிபிறந்தனரே! 77

மணிஒளிபரவப் பிறந்தார்

மண்ணகம் எங்கும் மணிக்கதிர் பரவ மாண்பொளி பரந்திருள் கழியக்
கண்ணக மாந்தர் களிப்பினில் துள்ளக் கவின் உடுக் குலங்களும் பொழிய
விண்ணகம் மண்ணில் வந்தது போல விரிநலம் எங்கணும் பூக்கப்
புண்ணகம் மாறிப் புன்னகை மின்னப் புகழ்முக நபி பிறந்தனரே! 78

கிசுரா மன்னன் கலங்கப் பிறந்தார்

மன்னவன் கிசுரா மனமது கலங்க மாந்தரின் குலமது விளங்கப்
பொன்னகர் மனையின் பொற்குடம் கவிழப் புதுமைகள் பலப்பல நிகழத்
தன்னலம் மிக்கோர் தாழ்ந்திட வையத் தகு பொது நலத்தவர் ஓங்கக்
கன்னலும் தோற்கும் கனிமொழி பேசும் கலைமுக நபி பிறந்தனரே! 79

இறைவனின் தூதுவராகப் பிறந்தார்

இறையவன் ஒருவன் இனியவன் காணும் இயல்பினில் வருபவன் அல்லன்;
மறையவன் அவனே வலியவன் எதையும் மாற்றவும் தோற்றவும் வல்லான்;
நிறைஒளி உடையன் நிகரிலன் தூதன் நெடும்புவி வந்தவன் யானே
கறையிலன் என்று கனிவுடன் மொழியக் கவின்முக நபிபிறந்தனரே! 80