அனைத்துக்கும் முதல்வர் பிறந்தார்
புரவலன் எங்கும் பொலிபவன் அன்பைப் பொழிபவன் புலையர்முன் அரியன்
இரவலரேனும் அரசர்களேனும் எழிலவன் முன்னவர் சமமே
மரம்நிலம் தொடங்கி விண்ணகம் அடங்க மாண்புறப் படைத்தனன் தன்சீர்
புரந்திட மண்ணில் நடந்தவராகப் புகழ்முக நபி பிறந்தனரே! 81
ஆண்டவன் பெருமை உணர்த்தப் பிறந்தார்
வாழ்நிலம் தந்த வலியவன் அல்லா வளம்தருகிற நலம் பரப்பத்
தாழ்நிலை நீக்கித் தழைப்பினிது ஆக்கித் தரையினில் தவழ்ந்திட நெஞ்சின்
ஆழ்நிலைத் தியான அமைதியில் மூழ்கி ஆண்டவன் பெருமைகள் உணர்த்தப்
பாழ்நிலை யவர்க்கும் பரிவுரை கூறப் பணிமுக நபிபிறந்தனரே! 82
பெருமை எல்லாம் பெற்றுப் பிறந்தார்கள்
அறுக்கும் தொப்புள் கொடியின்றி ஆன சுன்னத் தொடும் வந்து
பிறக்கும் போதே தொழுகை உரு பிறக்குமாறு பிறந்தார்கள்;
சிறக்கும் மெய்யில் மான்மதத்தின் சிறந்த மணத்தோடு உற்றார்கள்
பிறக்கும்போது பிறர்க்கில்லாப் பெருமை யோடும் வந்தார்கள்; 83
யானைப் போர் தோன்றிய காரணம்
அகம்பா வத்தான் அபுரகாதன் அழிக்கும் படையை முன்னடத்தித்
தகும்பேர் ஆனைப் படையோடும் தாக்க வந்தான் ககுபாவை;
பகைவன் அவன்தன் படைஅழிந்து பாழ்மெய் அழுகிப் பிணமானான்
வகையாய் அந்நாள் யானைப்போர் வாய்த்த ஆண்டாய்க் கணக்கிட்டார். 84
நபிபெருமான் தோன்றிய காலம்
அப்போர் நடந்து முடிந்தாங்கே ஆன ஐம்ப தாம் ஆண்டில்
செப்பும் ரபியுல் லவ்வல்மாதம் திங்கட் கிழமை நள்ளிரவில்
ஒப்பில் லாத நபிபெருமான் உலகில் தோன்றி ஒளிசெய்தார்
தப்பில் அபூத்தாலிப்பவர்தாம் தங்கும் வீட்டின் அகத்துள்ளே! 85
தீயவன் இபுலீசு நொடியில் வீழ்ந்தான்
தீயான் இபுலீசு அகக் கோட்டை சிதைந்து விழுந்து கவிழ்ந்ததுவே
வாய்மை இல்லான் செயல்எல்லாம் வதங்கி வாடி இழிந்தனவே
நோயே உடைய மனத்தானின் நோக்கம் தகர்ந்து சாய்ந்ததுவே
தூய நபியார் தோன்றியஅத் தூய நேர நொடிப்பொழுதே! 86
|