| 
         நொடிப்போதில் முகம்மது வானகம் சென்று வந்தார்
         
        நொடியில் வானச் செபுறயீல் நூர்முகம்மது சேய்தன்சீர் 
        அடிதொட் டேத்தி அருமையுடன் அருவான் வெளிகள் திசைமுற்றும் 
        கடிதில் சென்று காட்டி உடன் கனிவாய்த் தோன்றித் தாயவரின் 
        மடியில்வைத்து வான்போனார் மங்காச்சிறப்புக் கொண்டவரே!		87
         
        ஆமினா தாயின்நுதல் ஒளி எங்கே?
         
        ககுபா சென்று வணங்கியவர் கவினார் அப்துல் முத்தலிப்பு 
        தகுநல் இல்லம் தனை அடைந்து தாய் ஆமினாவின் நிலைகண்டார் 
        முகத்தில் ஒளியே கொண்டிருந்த முகம்ம தன்னை முகம்பார்த்தே 
        அகத்தால் மகிழ்ந்த அம்முதியார் அணி செய் நுதலின் எழில்கண்டார்.	88
         
        ஆமினா உரைக்கத் தொடங்கினார்
         
        நங்கை நல்லார் நுதல் மீதில் நாம்கண் டோமே ஒளிஅந்நாள் 
        இங்கே அந்த ஒளிஎங்கே? எல்லாம் வியப்பே என எண்ணி 
        “எங்கே குழந்தை காட்டுங்கள்?” என்று கேட்ட நல்லார்முன் 
        தங்க மனத்தார் ஆமினாதாய் தகுதியாக உரை செய்தார்!			89
         
        மூன்று நாள்கள் வரை குழந்தையைக் காணக்கூடாது
         
        “மாமா! பிறந்த சேய் இதனை மற்றோர் எவரும் முந்நாள்கள் 
        தாம்ஆம் வரையில் காணாத தன்மை கொண்டு நலமாகக் 
        காமா(று) அரிய வானோர்கள் கருத்துக்கூறி யுள்ளார்கள் 
        தீமை வரலாம்” என அன்னை தெரிவித் ததனைக் கேட்டவரோ;		90
         
        என் பேரனை நான் பார்க்கவா தடை?
         
        “என்றன் மகன் சேய் எழில்தன்னை எனக்குக் காணத் தடையாமோ? 
        நன்று! நன்று!! மிக நன்று!!! நான் போய்ப் பார்ப்பேன்” எனச் சொல்லிக் 
        கன்றைக் காண ஓடுகிற கனிந்த ஆப்போல் உள்போனார்; 
        அன்றங்கு உடைவாள் கொண்டொருவர் அரியோர் தடுக்க வெளிவந்தார்;	91
         
        ஏழுநாள் வரை ஊமையாக இருந்தார்
         
        வந்தோர் அந்நாள் முதலாக வகையாய் ஏழு நாள்வரையில் 
        எந்த உரையும் ஆற்றாமல் எதையும் உற்றுக் கேளாமல் 
        வந்த மூங்கைச் சேய்போல வாழ்ந்து வந்தார்; எட்டாம்நாள் 
        வந்த போதே அம்முதியார் வாயால் பேச இயன்றுதுவே!			92
         
 |