எல்லாவற்றையும் மறந்தார்
ஒப்பனை மறந்தார் வீட்டின் ஒழுங்கினை மறந்தார் காணும்
எப்புனை பொருளைக்கூட எடுக்கவும் மறந்தார் மற்றோர்
செப்புரை மறந்தார் உற்ற சிந்தனை மறந்தார்; ஆனால்
ஒப்பிலாப் பெருமான் சீரை ஒருபோதும் மறந்திலாரே. 118
பசலை படர்ந்தது
கசந்தது கரும்பும் திங்கள் கண்முனர் வெறுப்பாயிற்றே
அசைந்தன அருந்தேன் பூக்கள் அவர்கள்முன் நெருப்பாயிற்றே
இசைந்தன எல்லாம் காதில் எதிர்அரு வருப் பாயிற்றே
பசந்தனர் கதீசா அம்மைப் பைஞ்சுடர் நபிகா ணாதே! 119
பெருமானின் பண்பையே விரும்பினார்
பணத்தினை விரும்ப வில்லை பக்குவமான பூக்கள்
மணத்தினை விரும்பவில்லை மகிழ்ச்சியை விரும்பவில்லை
மனத்தினில் தோன்றி அன்பின் மாட்சியை விளக்கும் கோமான்
குணத்தினை மட்டுமேதான் கோதையார் விரும்பினாரே. 120
மைசறா மடல் வந்து சேர்ந்தது
எக்காலும் வருத்தம் ஓங்க ஏங்கிய கதீசா அம்மை
அக்காலம் நபியா ரோடும் அனுப்பிய மைச றாதான்
தக்கவாறு எழுதி விட்ட தனிமடல் வந்து சேர
மிக்கார்வம் கொண்டு செல்வம் மேவிய வறியர் ஆனார்; 121
மடலை அபூத்தாலிப்புக்கு அனுப்பினார்
வறியவர் செல்வம் வேறு வறியவர்க் குதவல் போல
நறியமென் கூந்தல் அம்மை நாடிய மடலை ஆண்மை
அறிவுயர் மேன்மை கொண்ட அபூத்தாலிப் பரியார் காணச்
செறிவுயர் மனத்தி னாலே சிறப்புடன் அனுப்பி வைத்தார். 122
***
|