பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்101


7. திருமணம் புரிந்த படலம்

கதீசா அம்மை கனவில் தோன்றியவர்

மக்காவுக்கு வந்தார்


கனவிலே கண்ட செம்மல் காடுகள் மலைகள் தாண்டிப்
புனல்மிகும் ஆறு பொய்கை பூமலர்ச் சோலை தாண்டி
அனல்மிகும் பாலை தாண்டி அரும்பல சாலை தாண்டி
இனம்மிகும் மக்கா விற்குள் இளைஞர்கள் சூழ வந்தார். 1

நபிகளாரைப் பாத்திமாவும் அபூத்தாலிப்பும் கண்டனர்

அரியதந் தையார் ஆன அபூத்தாலிபு அண்ண லாரும்
உரியஅம் மையார் ஆன ஒளிமுகப் பாத்திமாவும்
புரிமன அன்பர் மக்கா புகுந்ததும் கண்ணால் கண்டு
விரி மகிழ்வு ஆர்வம் தோன்ற விரைந்து முன்னாலே வந்தார்; 2

அபூசகுல் தன் இல்லம் சார்ந்தான்

உச்சிமோந்து அணைத்து முத்தம் உவப்புடன் அளித்த பின்னர்
நச்சிவந் திணைந்து சென்ற நல்லவர் வணிகர் எல்லாம்
மெச்சிடும் அவர்அவர்தம் மேன்மையாம் இல்லம் சேர்ந்தார்
நச்சுநெஞ்(சு) அபூசகுல் தன் நரிக்குகை அதனுள் போந்தான். 3

தாய்மனம் கொண்ட அன்புத் தலைவர்

வாய்மையான் மைச றாவும் வளத்தவர் கதீசா நோக்கித்
“தூய்மையே உருவாய்க் கொண்டீர் சுடரவர் பெருமை எல்லாம்
போய்மனம் விரும்பிக் கண்டேன் புகல்வதோ எளிமை இல்லை
தாய்மனம் கொண்ட அன்புத் தலைவருக் கீடே இல்லை”. 4

அன்னார் புனிதரே

“செய்வன எல்லாம் அன்புச் செயலன்றிப் பிறிதொன்றில்லை
கொய்வன எல்லாம் காணக் கூடுவோர் நெஞ்சே ஆகும்
தெய்வநம் பிக்கை யன்றித் தெரிவன நமக்கொன்றில்லை
பொய்வினை ஒன்றும் இல்லாப் புனிதரே அன்னார்” என்றான். 5