பக்கம் எண் :

102துரை-மாலிறையன்

தன்னலம் இல்லாத் தலைவர்

அற்புதச் செயல்கள் செய்தார் ஆங்கவர் செய்த வெல்லாம்
கற்பனை என்றார் கூடக் கால்களில் விழுந்து விட்டார்
பற்பல நலன்கள் செய்த பண்பினார் எந்தப் போதும்
தற்பெருமையே பேசாத் தலைவரே” என்றும் சொன்னான். 6

நற்பண்புகளை உரைக்க மொழியே இல்லை

கண்ணிய மான பேச்சும் கடமையில் தவறிடாத
புண்ணியச் செயலும் அன்பு பொருந்திய இரக்கம் தானும்
தண்ணிய மனமும் நட்புத் தங்கிய சால்பும் நெஞ்சத்
திண்ணிய ஒழுக்கச் சீரும் செப்பிட மொழியே இல்லை; 7

எடுத்துச் சொல்ல என்னாலே ஆகாது

மனத்திலே உறுதி; தூய்மை மாறாத இறைநம்பிக்கை;
இனத்தவர் பெருமை யாவும் ஏற்றநற் சீர்மை செய்யும்
வினைத்தடு மாற்றம் இன்றி விழைவன செய்யும் ஆற்றல்
இனைத்தென எண்ணிச் சொல்லல் என்னாலே ஆகாதம்மா! 8

ஆற்றல் அறைவது அரிதே!

நாணமே உருவம்; நன்றி நயப்பதே நல்லோர் போக்கு
காணும்நன் முகமலர்ச்சி கனிவொடு நேர்மை வீரம்
பூண்நலப் பொறுமை வையப் பொருள்தனில் பற்றில் லாமை
ஆண்மக னாரின் ஆற்றல் அறைவதோ அருமை யம்மா! 9

தூய பொன் போன்றவர்

தம்பணி தாமே செய்து தக்கார்க்கும் உதவி செய்வார்
நம்பணி எஃதென்றாலும் நயந்துடன் அதையும் செய்வார்
வெம்பணி ஒன்றைக்கூட விரும்பிய தென்றும் இல்லை
செம்பணி புரிவார் செம்பு சேராத பொன்னைப் போன்றார்; 10

என் உளறுவாய் அறியாது

எளியவர் எவர்க்கும் அன்பே இயற்றுவார் கொடிய செய்யும்
வலியவர் எதிர்த்த போதும் வம்பு செய்யாமல் வெல்வார்;
துளியது கூடத் தீய தூசில்லா நெஞ்சத் தாரே
ஒளியர்சீர் செப்ப என்றன் உளறுவாய் அறியா தம்மா! 11

இன்னாச் சொல்லே இல்லை

உள்ளொன்று வைத்துப் பேசும் உறவினை அறியார் அம்மா!
முள்ளொன்று செய்கை இல்லா முகம்மதுக் கிணையார் அம்மா?
புள்ளொன்று கூட அன்னார் புகழ்தனைச் சொல்லும் அம்மா!
சுள்ளென்று ஒருசொல்கூடச் சொன்னதே இல்லை அம்மா! 12