பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்103


அருள் சுரந்தவரே அம்மா

எளியவர் தமக்கும் அன்னார் எளியராய்த் திகழ்ந்தார் அம்மா!
ஒளியவன் முன்நாம்எல்லாம் ஒன்றெனச் சொன்னார் அம்மா!
வளியது கூட அன்னார் வாய்மைகேட் டடங்கும் அம்மா!
அளியவர் யாங்கள் ஆக அருள்சுரந் தவரே அம்மா! 13

அவரைப் பணியாதவர் இலர்

முடியாத பேர்களுக்கும் முன்னின்றே உதவி செய்தார்
அடிமைகள் எவரும் இல்லை அனைவரும் சமமே என்பார்
மடியாதல் அவரிடத்தில் மலர்ந்ததோ என்றும் இல்லை
படியாத பேரும் கூடப் படிந்தனர் அவர்முன் அம்மா! 14

இறைவன் புகழே பேசுவார்

தேவைஎப் பொருளோ அந்தத் தேவையே போதும் என்பார்;
கோவைவாய் குளிரப் பேசும் கொள்கையும் நெறியும் கொண்டார்;
நாவைஎப்போதும் அல்லா நல்லாணைப் படியே வைத்தார்;
பூவைப்போல் மென்மை கொண்ட பொன்நெஞ்சம் கொண்டார் அம்மா! 15

பணிவும் அடக்கமும் உடையவர்

வருகின்ற எளியார் முன்னும் வாய்மையை விரும்பிச் சொல்வார்
பெறுகின்ற பணிவின் மாண்பால் பெரியார்முன் எழுந்து கொள்வார்
அருகொன்று தீமை என்றால் அதனையும் அன்பால் சாய்ப்பார்
தருகின்ற அறிவுரைகள் தனித்திறம் வாய்ந்த அம்மா! 16

ஒரு போதும் சினம் கொள்ளார்

தனக்கெனப் படுக்கையில்லை தரையிலும் பாயிலும்தான்
எனக்கென்ன குறையே என்பார் இன்னுரை பேசும் நல்லார்;
சினப்பதே இல்லை அம்மா சிறுசொலும் சொல்வதில்லை
மனப்பகை என்பதெல்லாம் மருந்துக்கும் இல்லை அம்மா! 17

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்வார்

மன்னிக்கும் இயல்பு கொண்ட மகம்மதின் உள்ளம் என்றும்
பொன்னிற்கும் பெருமை கொண்ட புகழ்கொண்டு நிற்கும் அம்மா!
என்றைக்கும் தூய்மை யாளர் இயம்பிடும் சொல்லே நிற்கும்
கொன்றன்ன செய்வார்க்குந்தாம் கொடுமைசெய் யாரே அம்மா! 18