பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்99


கதீசா அம்மை கனாக் கண்டார்

சுடரொளி யாரைக் கண்டு சூழ்ந்தவர் வியந்த தைப்போல்
அடர்ஒளிக் கதீசா அம்மை அருந்துயில் கொண்ட போதில்
தொடர் கனாக் காட்சி தன்னில் தோன்றலைக் கண்டு வந்தே
உடன்விழி மலர்ந்து கண்ட உருக்காணத் தெருவில் போனார். 112

எல்லாம் கனவே என உணர்ந்தார்

கண்டவை கனவே என்று கருதாமல், தெருவில் எல்லாம்
உண்டவை என்றே ஒடி உணர்ந்தனர் அரிவை நல்லார்;
தொண்டர்முன் வைத்த சோற்றைத் தொட்டவர் உண்ணும் போதில்
தண்டனை என்றே உண்ணத் தடைசெயப் படல்போல் ஆனார்; 113

கதீசா அம்மை வாடினார்

பொறுமையில் புவியை ஒக்கும் புகழ்மணி கதீசா அம்மை
வெறுமையைக் கண்டார் போல வேதனை அடைந்து வாழ்வில்
வறுமையை உற்றார் போல வலிமையே இழந்து நெஞ்ச
உறுதியே இலாதார் போல ஒடுங்கியே கலக்கம் கொண்டார்; 114

திகைப்பு அடைந்தார்

குடிப்பிறப் புடைய ஈகைக் குளிர்மணி கதீசா அம்மை
இடிமுழக் கோடு வந்த எழில் மழைக் கேங்கும் போதில்
அடித்தகாற் றழிக்க வானம் அருமுகில் இழக்கக் கண்ட
செடி கொடிப் பசுமை போலத் திகைப்பினை அடைந்தார் ஆங்கே; 115

கற்பனைச் சுனை கண்ட அன்னம் ஆனார்

கற்பினில் சிறந்த அன்புக் கலைமணி கதீசா அம்மை
வெற்பினில் சுனையைக் காண விழைந்த ஓர் அன்னம் ஆங்கே
முற்படக் கண்ட போது முழுவதும் நீர் இல்லாத
கற்பனைச் சுனைகண்டார்போல் கலங்கினார் தெருவில்நின்றே! 116

கதீசா மகிழ்ச்சியை மறந்தார்

உண்ணவும் மறுத்தார் கட்டில் உறக்கமும் மறுத்தார் நட்புப்
பண்ணவும் மறுத்தார் தண்ணீர் பருகவும் மறுத்தார் இன்ப
வண்ணமே மிகுந்த ஆடை வகைகளும் மறுத்தார் பால்பெய்
கிண்ணமும் மறுத்தார் நெஞ்சக் கிளர்நகை இழந்த தாலே; 117