பக்கம் எண் :

98துரை-மாலிறையன்

ஊசா விருந்து வைத்துப் போற்றி அனுப்பினான்

நல்லவன் ஊசா அன்பை நல்கிடும் நபியார் பாதம்
மெல்லவே பணிந்து போற்றி மென்சுவைக் கனிகள் தந்தே
“அல்லாவே எல்லாம் வல்ல ஆண்டவன் என்று வாழ்த்திச்
செல்லுக” என்றான் செம்மல் சென்றனர் வணிக ரோடே; 106

முகம்மது தோழர்களுடன் சென்றார்

வருவன உரைக்கும் ஊசா; வனிதையார் நற்கதீசா
பெருவளக் கனாவைக் கேட்டுக் பெறப்போகும் நிலை உரைத்தார்
அருமறை நெறியைக் காட்டி ஆட்கொள வந்த பெம்மான்
ஒருமனப் பட்டா ரோடும் ஒன்றியே நடந்து போனார். 107

இயற்கையைக் கண்டு வாழ்த்திச் சென்றார்

கனிஉதிர் சோலை வெய்யோன் கதிர்தெறு பாலை மீன்கள்
நனிவளர் பொய்கை மக்கள் நடமிடும் சாலை நாட்டின்
தனிநலம் காக்கும் கோட்டை தவழ்மலை ஈட்டம் யாவும்
இனிதுறக் கண்டு வாழ்த்தி ஏகினார் நபிக ளாரே; 108

தமிழ்மன்னர் போல் வந்து கொண்டிருந்தார்

வான்முகில் குடையை ஏந்த வளர்சிறைப்பறவை ஈட்டம்
தான்எழிற் கவரி வீசத் தகுமலர்ச் சோலைப் பூக்கள்
தேன்பனி நீர்தெளிக்கத் தென்தமிழ் நாட்டு வேந்தர்
கோன்வரு வதனைப் போலக் கோமகன் வருகை தந்தார். 109

இயற்கைகள் வணங்கின

கொடிமலர் இடையில் பூத்துக் கொஞ்சிடப் பரவி உள்ள
செடிமலர் பூத்து வானச் சீர்நபி யாரின் மென்மை
அடியிணை கண்டு நாண ஆர்த்திடும் மரங்கள் எல்லாம்
குடிமக்கள் தெருவில் நின்று கும்பிடல் போன்ற வாமே! 110

வானவர் போற்றி மகிழ வந்தார்

பல்லியம் முழங்க நான்கு படைகளும் நெருங்கச் சான்றோர்
நல்லியல் புடைய மக்கள் நறுமணம் பொங்கிச் சூழ
ஒல்லெனும் ஆர வாரம் ஓங்கிட வானோர் போற்றிச்
சொல்லிட நபிகள் பெம்மான் சுடர்ஒளி யோடு வந்தார்; 111