|
இறைவனின் தூதர் இவரே
நங்கையார் கனவைச் சொன்ன நல்லவன் மைச றாமுன்
செங்கையான் ஊசா என்பான் செப்பினான் “அன்ப! மண்ணில்
வெங்கையார் செய்யும் தீய வேதனைச் செயலை எல்லாம்
தங்கையால் தீர்க்க எண்ணித் தலைவனே அனுப்பி யுள்ளான்; 100
இவரே முகம்மது திருக்குர்ஆன் அருள வந்தவர்
அன்னாரே இறுதி யான அல்லாவின் நபியாம் தூதர்
இன்னாரே இசுலாம் என்னும் எழிற்பயிர் விளைக்க வந்தார்
பன்னாளும் இறைவன் சொல்லால் பகருவார் மறையே; அந்தப்
பொன்னாளர் இவர்தாம் அன்புப் புகழ்முகம் மதுவே ஆவார்; 101
முகம்மதுவே மணவாளர் ஆவார்
பனிமொழி யவர்க னாவில் பனிவானின் குளிர்ந்த திங்கள்
தனிஒளி காட்டி வந்து தங்களின் மடி தவழ்ந்து
கனிந்ததன் காரணத்தால் கலைமுகம் மதுவே ஏற்ற
மணிமண வாளன் ஆகும் மறைபொருள் அதிலே உண்டு; 102
எல்லா வளமும் பெருகும்
இருவரும் மணந்து வாழ்க்கை இனிப்புறும் இவர்க ளாலே
திருவரும் செல்வம் தோன்றும் திகைப்பவர் தெளிவார் அன்பின்
கருவரும் மக்கள் எல்லாம் களிப்புறும் நிலையில் வாழ்வார்
வரும்வரும் வாழ்வில் எல்லா வளங்களும்” என்றான் ஊசா. 103
மைசறா மடல் தீட்டினான்
வலியவன் மைசறா தன் வள்ளலைத் தொடர்ந்து வந்த
ஒளிமிகு நாள்கள் எல்லாம் உருவான செயல்கள் எண்ணி
வளமிகு ஊசா சொன்ன வாய்மையை முழுதும் போற்றிக்
களிமிகக் கொண்டு செய்தி கனிகின்ற மடலும் தீட்டி; 104
தூதுவன் மடல்கொண்டு போனான்
முத்திரை இட்டுத் தங்கள் முழுநம்பிக் கைக்கு வாய்த்த
வித்தகன் ஒருவன் கையில் விழைந்ததைக் கொடுத்து, “நீபோய்
முத்துநேர் முகக்கதீசா முன்தந்து வருவாய்” என்றான்;
அத்தகை யோனும் வாங்கி அப்போதே மக்கா போனான். 105
|