நான் முகம்மதுவுக்குத் துணையாளாக வந்தேன்
வலியானாம் மைசறாதன் வரலாறு கூறும் போதில்
பொலிவான திங்கள் போன்ற புகழ்முகக் கதீசா அம்மை
நிலையான அடிமை யானே நிழலாகத் தொடர்ந்து வந்து
கலைமுகம் மது நல்லார்க்குக் காவலாய் இருந்தேன்”என்றான். 94
கதீசாவின் தந்தை குவைலிதுவும் யானும் நண்பர்கள்
நங்கைபேர் கேட்ட ஊசா நலமிகு மனத்தனாகி
மங்கையின் தந்தையான மாண்குவை லிதுவும் யானும்
எங்கள்முற் பருவம் தன்னில் இணையிலா தொன்றி வாழ்ந்தோம்
அங்கவர் தாமும் யானும் அன்புடன் நட்புக் கொண்டோம். 95
தங்களிடம் ஒரு செய்தி கூற வந்தேன்
என்றதும் மைசறாவின் இதயத்தில் நின்ற ஊசா
என்னும் பேர்; அம்மையாரும் இயம்பினார் இப்பேர் என்றே
கன்னலும் கனியும் ஒன்று கலந்தநன் னிலைபெற் றானாய்
நன்றுணர் பெரும! உம்பால் நவிலஒன் றுண்டே” என்றான். 96
கதீசா அம்மை கனவு கண்டார்
நறியமென் கூந்தல் நல்லார் நள்ளிருள் உறங்கும் போதில்
அறியவே இயைந்திடா ஓர் அருங்கனாக் கண்டு வைத்தார்!
குறைவிலா முழுமைத் திங்கள் கோதில்வான் மேலிருந்து
நிறையுளார் கதீசா அம்மை நேர்மடி மீதில் தங்கித்; 97
கனவைத் தங்களிடம் கூறச் சொன்னார்
தவழ்ந்ததாம்; நங்கை யாரும் தங்கள் முன்ஆடை கொண்டு
பவழம்போல் விரல்கையாலே பக்குவம் செய்து மூடிக்
கவிழ்த்துக் காத்தனராம்” இந்தக் கனாவொன்று கண்டதாயும்
“நவின்றதன் பொருளை நாடி நல்கவும் சொன்னார்” என்றான். 98
உங்களுக்குச் சலாமும் கூறினார்
நிலாவொன்று முகத்தார் இந்த நிலைக்கனா கூறும் முன்னர்ச்
சலாமொன்றும் உரைக்கச் சொன்னார் சார்ந்தஉம் பேரைக்கேட்டுப்
பலாவொன்று பழுத்து வந்து பசித்தோர்க்குக் கிடைத்தால்போல
உலாவந்த எங்கள் முன்னே உருக்காட்டி வந்தீர்” என்றான். 99
|