பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்105


கனாக்கண்டு எழுந்தார்

உறக்கத்தில் எழுந்த தாம்ஓர் உறுகனா அதனை நல்லோர்
“உறக்கத்து” எனும்பேர் கொண்ட உயர்நெறி வல்லான் தன்பால்
சிறக்கத்தான் எடுத்துக்கூறச் சிந்தனை செய்துஅவ்வல்லான்
மறைகற்ற மேன்மை யாலே மறைக்காமல் யாவும் சொன்னான். 25

முகம்மது தந்த இசுலாம் நெறி

“வேர்மன்னும் நம்பிக் கையால் விளைமரம் முகம்மது ஆவார்
சீர்மணம் என்பது அன்பு சிறந்தெழும் “இசுலாம் கொள்கை
நேர்மலி கனிகள் மக்கள் நிகழ்கலிமாவைச் செப்பல்
பூமழை பொழிதல் பெம்மான் புகழ்மணம் முடித்தல்” என்றான். 26

கனாவின் உட்பொருள் உரைக்க வந்தான்

கனாப் பொருள் கேட்டப் போதே களித்த மைசறா எழுந்து
வினாவிய குவைலி துக்கும் விளக்கினான் அம்மையார்க்கு
மணாளராய் வரப்போகின்ற மகம்மது நபியார் தம்பால்
கனாப் பொருள் முழுதும் சொல்லக் களிப்பது கொண்டு சேர்ந்தான். 27

முகம்மது தமதில்லம் போனார்

மைசறா கூறக் கேட்டப் மகம்மது மகிழ்ந்தென்றென்றும்
பொய்சொலா அபூத்தாலிப்பின் புகழ்மனை அடைந்து தங்கள்
கைசலாம் தந்தும் உற்ற கனவெலாம் உறக்கத் துத்தன்
மெய்சொலால் எடுத்து ரைத்தும் மேவினர் இல்லத் திற்கே; 28

அமுசாவை அனுப்பி வைத்தார்

பொன்மனத்(து) அபூத்தாலிப்பு புதுமணம் பெற்றார் போல
நன்மணம் முடிக்கத் தங்கள் நட்புநல் உறவு மக்கள்
பன்மணத் தார்க ளோடும் பலபட ஆய்ந்த பின்னர்
நன்மன அமுசா தம்மை நலம்பேச அனுப்பி வைத்தார். 29

குவைலிது நெஞ்சம் மகிழ்ந்தார்

நாடி வந்(து) அமுசா சொல்ல நல்குவைலிதுவின் நெஞ்சம்
கோடிமேல் கோடி வந்து குவிவதைப் போல எண்ணி
நாடினி நலமே காணும் நல்லவர் மணத்தால் என்றே
தேடிப்போய் எல்லாருக்கும் தெரிவித்தார் மகிழ்ச்சி யாலே. 30