திருமணச் சடங்குகள் நடைபெற்றன
மாப்பிளை வீட்டாருக்கும் மணப்பெண்ணின் வீட்டாருக்கும்
வாய்ப்புள்ள நேரம் எல்லாம் வரிசைகள் தந்தும் கொண்டும்
சீப்புள்ள வாழைத்தார்கள் செழுங்கனி மரங்கள் கட்டிக்
காப்புள்ள காலும் நாட்டிக் கலந்துகொண் டனரே
ஒன்றாய்; 31
மணஓலைகள் அனுப்பினர்
பொங்குபால் எழுந்த திங்கள் புனிதநாள் ஒன்று
தேர்ந்து
செங்கதிர் அண்ண லார்க்கும் செந்தாமரை நல்லார்க்கும்
தங்குல மேன்மைக் கேற்ற தகுதியில் மணம்குறித்தார்
எங்குள பேரும் இந்த எழிலான செய்தி கேட்டார். 32
ஊரை அலங்கரித்தனர்
மணிநகர் மக்கா ஊரின் மாந்தர்கள் ஒன்று கூடி
வணிகரின் பெருமைக்கேற்ற வளத்தினைச் செலவு செய்து
துணிகளால் கொடிகள் தைத்துத் தோரண வாயில்
கட்டி
அணிகளை வரிசையாக்கி ஆங்காங்கே தொங்க விட்டார்; 33
தூய்மை செய்தனர்
தெருவினைத் தூய்மை செய்தார்; தெளித்தனர் சாந்தம்;
மக்கள்
உருவினை அழகு செய்தே உலவினார் எவ்விடத்தும்
இருளினை எங்கும் காணா இயல்பினில் விளக்கம் வைத்தார்;
அருளினை மக்கள் எல்லாம் அணியென அணிந்து சென்றார். 34
அனைவரும் உயர்ந்த உள்ளம் கொண்டனர்
மனைதொறும் மகிழ்ச்சி வெள்ளம் மக்களின் எழுச்சி உள்ளம்
இணையிலா அன்பு வெல்லத்(து) இனிப்பினைச்சொல்லும் சொல்லும்
பனையினும் உயர்ந்த உள்ளம் பண்பினார் தங்கள் தங்கள்
நினைவிலும் வினையி னாலும் நெகிழ்ச்சியைக்
காட்டினார்கள். 35
விழாக் கோலம் புனைந்தனர்
பொங்கலைப் பொங்கி நல்ல புதுவிழாக் காணுகின்ற
செங்கனித் தமிழ்நாட் டார்கள் செய்கின்ற விழாவைப் போலத்
தங்களைத் தூய்மையாக்கித் தனிநலம் விரும்பும் மாந்தர்
அங்கங்கே அழகை நாட்டி அணிவிழாக் கோலம் கண்டார். 36
|