ஊர்வலம் சென்றனர்
மணக்கோலம் கொண்ட அன்பு முகம்மது மாப்பிள்ளையும்
மணிக்கோலம் பூண்ட நங்கை மகிழ்மனக் கதீசா பெண்ணும்
இணைக்கோல வாழ்க்கை என்னும்இல்லறம் பொலியக்
காணத்
தனிக்கோல ஊர்வலத்தில் தலைமக்களாக வந்தார். 37
திருமணம் நடந்தேறியது
மக்காவின் மக்கள் சூழ மணப்பந்தல் முன்னேவந்து
நிக்காகு குத்பா ஓத நெடியவர் அபூத்தாலிப்பு
முக்கால நெறியை ஓர்ந்து முறைப்படி வாழக் கூறும்
தக்கநன் னிலையில் நின்று தலைமையாம் பொறுப்பை
ஏற்றார். 38
வாய்மையில் குறையாதவர்
இளைஞராய் இருக்கும் இந்த இனியவர் முகம்மதென்பார்
களங்கமில் லாத நல்லார் கண்ணிய முடையார் உற்ற
அளவிலா அறிவும் கொண்டார் ஆருமே இவரை மிஞ்சார்
வளமிலார் என்ற போதும் வாய்மையில் குறைதல்
இல்லார்; 39
இவர் கதீசாவை விரும்புகின்றார்
அழிந்திடும் செல்வம் அற்றார் ஆயினும் எந்த
நாளும்
இழிந்திடும் செயல் செய்யாத இனியவர் இவர்போல்
அன்பைப்
பொழிந்தவர் எவரும் இல்லை புகழ்குவை லிதுவின்பெண்ணாம்
எழில்மகள் கதீசா தம்மை இதயத்தால் விரும்பு கின்றார். 40
இருபது ஒட்டகங்கள் மகர்
இன்னவாறு அன்புகொண்ட இம்மகள் கதீசா தாமும்
நன்முகம் மதுவினாரை நாடினார் மணமுடிக்க;
முன்மகர் ஆக வைத்தார் இரண்டுபத்து ஒட்டகங்கள்
கண்முனர்க் காண்க என்றே காட்டினார் அபூத்தாலிப்பே! 41
மகிழ்ச்சிக் கண்ணீர் விட்டார்கள்
ஊர்வல அழகைக் கண்ட ஊரவர் உவகை கொண்டார்
ஆர்வலர் பலரும் கூடி அணிவளர் வானத் தார்க்கும்
சீர்வளர் கின்ற இந்தச் சிறப்புகள் வாரா வென்றே
நீர்வள மகிழ்ச்சிக் கண்ணீர் நெடிதுற விடுத்தார்
ஆங்கே! 42
|