பக்கம் எண் :

108துரை-மாலிறையன்

இறைவன் ஒன்று சேர்த்தான்

எவற்றையும் இயற்ற வல்ல இறையவன் எந்த நாளும்
தவத்தையே புரிந்த நல்லார் தவழ்மணி கதீசாவையும்
புவிக்கொரு வானத் தூதர் புகழினார் தமையும் வையம்
உவப்புற இணைத்து வைத்தான் ஒளிதவழ் செயலினாலே! 43

அன்பினால் யாவும் நடந்து நிறைவேறின

கொட்டினார் மேள தாளம் குழுமினார் மக்கள் கூட்டம்
மட்டிலா மணியும் பொன்னும் மாண்பினார் ஏந்தி னார்கள்
பட்டினால் ஆடை கட்டிப் பாவையோர் சூழ்ந்து வந்தார்
தட்டினார் தாம் பூலங்கள் தந்தனர் அன்பினாலே! 44

பண்பும் பயனும் நிறைந்த இல்லறம்

அன்பும் அறனும் பெருகிடவே அன்றில் பறவை போன்றவராய்
இன்ப வாழ்வின் எல்லையினை இரண்டு பேரும் கண்டார்கள்
துன்பம் அன்னார் வாழ்க்கையினில் தொடவும் கூட அஞ்சியதாம்
பண்பும் பயனும் மிகுந்தவராய்ப் பணிவாய் வாழ்ந்தார் இருவருமே; 45

இருவரும் ஒருவர் ஆனார்

முல்லை மலர்தான் ஒருவரெனில் முறுவல் போன்றோர் மற்றொருவர்
நல்ல வெண்முத்(து) ஒருவரெனில் நல்கும் குளிர்ச்சி மற்றொருவர்
சொல்லே ஒருவர் எனஆயின் சூழ்பொ ருளானார் மற்றவரே
கல்லில் செதுக்கும் கலையாகக் கண்முன் ஆனார் உற்றவரே! 46

ஏழு மக்கள் ஈன்றனர்

ஒன்றி விட்ட நெஞ்சத்தார் ஒட்டி வாழ்ந்த உறவினிலே
ஒன்றில் ஒன்றாய் இருந்தவர்கள் உள்ளம் களிப்பே நிறைந்துவர
நன்றே நயக்கும் புதல்வரென நான்கும் மூன்றும் பெற்றார்கள்
மன்றல் வாழ்வின் பெருமையினை மண்ணில் நயந்து கண்டார்கள்; 47

நான்கு பெண்மக்கள்

செம்மைக் கதிரோன் அன்னவரும் சீர்வெண் திங்கள் முகத்தாரும்
இம்மைப் பயனின் நலம் காண இனிய மகளாம் சயினபுவும்
அம்மாண் புடைய ருக்கையா அழகி யாம்உம் முகுல்தூமும்
எம்மாதர்க்கும் உயர்வான எழில்பாத் திமாவும் உருவானார்; 48