பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்109


மூன்று ஆண்மக்கள்

மாசில் லாத காசீமும் மகனாய்ப் பெற்ற தையீபும்
காசில் அன்புத் தாகீறும் கனிந்தார் ஆண்கள் மூவருமாய்
ஈசனவன்தன் அருந்தூதர் முப்பத் தைந்து வயதானார்
தேசம் முற்றும் முகம்மதுவின் சிறப்பை எண்ணிப் போற்றியதே. 49

ககுபா சிதைந்தது

இறைவன் அல்லா எழிலகமாம் இனிய ககுபத் துல்லாவை
முறையாய் ஐந்து தடவைகள் முயன்று கட்டி முடித்தார்கள்
நிறைவாய்க் கட்டி இருந்தாலும் நேர்ந்த இயற்கைத்தாக்குதலால்
உறைவான் இறைவன் ககுபாவும் ஒருபால் சிதைந்து விழுந்ததுவே! 50

கள்ளர்கள் இடித்தனர்

மற்றும் ஒருநாள் மடமிக்க மனத்துத் திருடர் ஒன்றாகிச்
சற்றும் நலமே இல்லாமல் தக்கார் சூழும் ககுபாவில்
உற்ற பொன்னும் மணிக்குவையும் உளதாய்எண்ணிக் கொண்டவர்தாம்
முற்றும் ககுபா உட்சுவரை முயன்று மறைவாய் இடித்தார்கள் 51

ககுபாவின் கடைக்கால் விழுந்தது

எல்லாம் தோண்டிப் பார்த்தவுடன் எதுவும் இல்லை எனக் கண்டே
கல்லும் மண்ணும் கிடந்திடவே கள்ளர் விட்டுச் சென்றார்கள்
பொல்லார் செய்த தீவினையால் புன்மைப் பழியே சுமந்தார்கள்
கல்லால் செய்த ககுபாவும் கடைக்கால் முற்றும் விழுந்ததுவே. 52

கறையிலாப் பணமே ககுபா கட்ட உதவும்

குறைசி குலத்து நல்லார்கள் கூடி ஓன்றாய்ப் பேசியபின்
இறைவன் உறையும் ககுபாவை எழிலாய்க் கட்ட நினைத்தார்கள்
கறையே இல்லாக் கடவுள்தன் ககுபா கட்டும் திருப்பணிக்குக்
கறையில் லாத செல்வம்தான் கலக்க வேண்டும் என்றார்கள்; 53

பலரும் சமமாக உதவினர்

தூய பொருள்தான் ககுபாவின் தோற்றத்துக்குப் பெறவேண்டும்
தீய வட்டி திருட்டுவளம் சிறிதும் சேரக் கூடாது
நேயம் கொண்ட குறைசியர்கள் நெருங்கிவந்து பல்லாரும்
ஆயஉதவி அளிப்பதிலே ஆரும் சமமே என்றார்கள்; 54