பக்கம் எண் :

110துரை-மாலிறையன்

பழைய ககுபா இடிக்கையில்

பழைய ககுபா நிலையதனைப் பறித்தெடுத்துப் பின்னதன்மேல்
இழைக்க வேண்டும் புதிது என்றே எண்ணி இடிக்கும் வேளையிலே
வழக்க மான ஒலியின்றி வையம் இடிந்து விழுவது போல்
எழும்பும் ஒலியைக் கேட்டதனால் இடிக்கும் வினையை விடுத்தார்கள். 55

புதிய ககுபா கட்டி முடித்தார்கள்

அதற்கு மேலே புதுக்ககுபா அழகாய் முயன்று செய்தார்கள்
எதற்கு இங்குஎவர் என்று ஒதுக்கினரோ எல்லாரும்தம் பங்குகளை
முதற்கு முதலாய் முன்னின்று முயன்று கட்டி முடித்தார்கள்
புதர்க்குள்ளேயும் இறைவன் அருள் புதைந்திருத்தல் உண்டன்றோ? 56

கருத்து வேறுபாடு தோன்றியது

கட்டும் பணிதான் முழுமையுறும் காலம் வந்த ஒருபொழுதில்
எட்டுத் திசையும் வணங்கும்எழில் இயைந்த கசுறில் அசுவதெனச்
சுட்டும் கல்லைப் பொருத்திவிடச் சூழ்ந்தார் தமக்குள் போட்டிவர
முட்டுக்கட்டை ஒன்றன்னார் முயற்சிக் கிடையே தோன்றியதாம். 57

அனைவரும் இசையும்படி முடிவு கூறினார்

முன்னே நின்ற முகம்மதுதாம் முடிவு செயவே வேண்டுமெனச்
சொன்ன மொழியைக் கேட்டவரும் சுற்றி நின்றார் மகிழ்ந்திடவே
நன்னர் நாடி ஒரு முறையை நன்கு சொன்னார் எல்லாரும்
தன்னே ரில்லா முடிவென்றே தலையை ஆட்டி மகிழ்ந்தார்கள். 58

கசுறில் அசுவது பொருத்தப்பட்டது

பெரிய போர்வை ஒன்றதனைப் பேணிக் கொணர வைத்தவுடன்
அரிய கசுறில் அசுவதனை அதன்மேல் வைக்கச் சொன்னார்கள்
உரியோர்எல்லாம் போர்வையினை ஒருங்கேதூக்கும் படிவைத்துச்
சரியாய்க் கல்லைக் ககுபாவில் சார்த்திப் பெருமை உற்றார்கள். 59

அனைவரும் அல்லாவை வாழ்த்தினர்

எல்லார் உளமும் ஒப்பிடவே இதனைச் செய்த வல்லாரைக்
கல்லார் தோளார் முகம்மதுவைக் கற்றோர் மற்றோர் எல்லாரும்
சொல்லால் செயலால் நெஞ்சத்தால் சூழ்ந்து நின்று கொண்டாடி
அல்லா என்னும் அரும்பேரை அகத்தால் வணங்கி மகிழ்ந்தாரே! 60

***