ஒளியோடு ஒலியும் வந்தது
ஒளிவந்த சிலநாளில் சேயைச் சுற்றி
ஒளிர்கின்ற திசைஎல்லாம் உவப்புத் தோன்ற
வெளிவந்த ஒலிஎன்னும் இசையி னோடு
விரைந்தன்னார் செவிஇரண்டைக் கவர, ஓசை
வளிவந்த வழிஇடையில் எவரும் தோன்றி
வந்ததிலை இரவோடும் பகலு மாகத்
தெளிவந்த இன்னோசை கேட்டுக் கேட்டுத்
திருவந்த நெஞ்சினரோ வியப்புக் கொண்டார். 3
மலைமீதில் நோன்பிருந்தார்
அடிக்கடிஇந் நிலையில்ஒளி ஒலியும் தோன்ற
அண்ணலவர் உளமாற்றம் கொண்டார் வாழும்
குடியிருப்பில் தங்குதற்கு விருப்பம் இன்றிக்
கூடிவரும் தோழரொடும் பழகல் நீங்கி
அடிஎடுத்து வைத்தேகித் தனிமை நாடி
ஆருக்கும் தெரியாத படிபல்குன்றின்
முடிக்குகைகள் அருகமர்ந்து மனமடக்கி
முறையான நோன்பதிலே ஈடுபட்டார். 4
நோன்பியற்றி இல்லம் சென்றடைவார்
ஒளிக்கெல்லாம் ஒளிகொடுத்த நல்லோன் மண்மேல்
உயிர்க்கெல்லாம் உயிர்கொடுத்த வல்லோன் வான
வெளிக்கெல்லாம் வளிகொடுத்த அரியோன் தன்சீர்
விருப்பத்தால் யீறாக்குன் றதனில் நெஞ்சம்
புளிக்கின்ற தன்மையே இல்லா வண்ணம்
புனித்தமனத் தொடுநல்ல நோன்பி யற்றிக்
களித்தவண்ணம் நாள்கடத்தி மலையை நீங்கிக்
கதீசாவின் இல்லத்தைச் சென்று சேர்வார். 5
|