பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்117


“இக்ரஉ முதல் மாலம்யஃலம்” வரை ஓதுக.

“கேட்போர்கள் உயிர்உணர்வு மெய்யும் ஒன்றக்

கெழுநலன்கள் பொழிகின்ற திருக்குர்ஆனில்

மாட்சியுறும் அத்தியாயம் தொண்ணூற் றாறில்

மலர்ந்திருக்கும் “இக்ரஉ” எனத் தொடங்கி

நீட்சியுறும் “மாலம்யஃலம்” என்ற சொல்லின்

நிலைவரையில் தாங்களிங்கே ஓது” கென்றே

ஆட்சி செயும் அல்லாவின் ஆணை ஏற்ற

அரியவராம் செபுறயீல் ஆங்கே சொன்னார்; 18

பெருமகனார் திருக்குர்ஆன் ஓதினார்

பணிவுடனே திருக்குர் ஆன் புனித மாண்பைப்

பற்றுடனே முற்றுமவர் உள்ளம் வைத்துத்

துணிவுடனும் தூயமன நினைவும் கூடத்

தொடர்ந்தபொருள் சுவையோடும் நாவெழுந்த

மணிஒலி போல் இசைஒலியும் கலந்து தோன்ற

மறைமகனார் அருள்பெருக ஓத ஓத

அணிஅணியாய் அழகொளிசெய் இயற்கை எல்லாம்

அவைதங்கள் நிலைமறந்தே செழித்த வாலோ! 19

இறைமொழி ஓத ஓத அறம் ஓங்கிற்று

ஓங்கியவர் தீன்நெறியை ஓத ஓத

ஓங்கியதே எங்கெங்கும் அறத்தின் மாண்பே;

பாங்குடையோர் அருள்மொழியை ஓத ஓதப்

பரவியதே எங்கெங்கும் புனித வாழ்வே!

ஆங்கினியோர் இறைநெறியை ஓத ஓத

அரும்புவியோர் விண்ணோரால் ஒளியர் ஆனார்;

ஏங்கியவர் எந்நலமும் பெற்றார் அண்ணல்

எழில்நாவால் இறைமொழியை ஓதுங்காலே! 20