பக்கம் எண் :

118துரை-மாலிறையன்

திருக்குர் ஆன் ஓதுங்கால் இயற்கைகள் மகிழ்ந்தன

பூத்தெழுந்த மலர்க்குலத்தின் புதுமை காணப்

புள்ளினங்கள் ஆர்வத்தால் எழுந்த வாலோ;

காத்திருந்த விலங்கினத்தின் களிப்புக் காணக்

கடலலைகள் மேலெழுந்து பார்த்த வாலோ;

மூத்திருந்த உயிர்களுக்கும் முதுமை நீங்க

முகிழ்த்ததனி இளமையினால் களித்த வாலோ;

நாத்திறந்து நாமகனார் இறைவன்தந்த

நறுமணத்துத் திருக்குர்ஆன் ஓதுங்காலே! 21

மறை ஓதக் கேட்ட செபுறயீல் மகிழ்ந்தார்

இத்தனைசீர் நலம்பெருக நபியார் தெய்வ

இசைபரப்பும் திருக்குர்ஆன் ஓதக்கேட்ட

முத்தனைய செபுறயீல் மெய்ம்மறந்து

முகிழ்மதுவே செவிபுகுந்த நிலையராகி

அத்தனையும் அத்தனவன் தூதாய் வந்த

அரியனையும் நெஞ்சத்துள் வைத்துப் போற்றி

எத்தனையோ பேரின்பம் பெற்றார் போல

இதயத்தால் குளிர்ந்தவராய் வான்மேல் போனார். 22

பெருமானாரின் உடல் நடுங்கிற்று

போனவரின் திசைநோக்கி நின்ற கோமான்

புதுமையுற நடந்தஎலாம் எண்ணிப் பார்த்து

வானவனின் செயலிதுவே என்று தேர்ந்து

மாண்புடைய அழகுயீறாக் குன்றை நீங்கி

ஆனவரை ஐயனுக்கே அனைத்தும் என்றே

அகமகிழும் கதீசாநற் புகழார் தம்பால்

போனவுடன் புகழ்மகனார் உடல்வெயர்த்துப்

பொலிந்தஉடல் நடுநடுங்கிப் போர்த்தச் சொன்னார். 23