பக்கம் எண் :

120துரை-மாலிறையன்

கதீசா அம்மை, “இறைவன் அருளே” என்றார்

”நல்லவரே! நாயகரே! நடந்த வெல்லாம்

நன்மையதே தவிர வேறொன்றும் இல்லை

வல்லவனாம் இறையவனின் அன்பு நோக்கம்

வந்ததனால் இந்நிலையை அடைந்தீர் நீவிர்

பல்லவரும் போற்றிடவே பணிகள் செய்யப்

பாரகமே வந்துள்ளீர்” என்று கூறி

இல்லமணி விளக்கான கதீசா வந்த

இருள்நீக்க விளக்குகளை ஒளிரச் செய்தார். 27

கதீசா, வரக்காவை அழைத்துப் பேசினார்

காலைஎழிற் பரிதிவிண்ணில் தோன்ற அம்மை

கண்விழித்து வேலையாளை விரைந்தழைத்துச்

“சாலைபல கடந்துபோ நீ கலையில் மிக்க

தகும் இப்னு மைந்தரான வரக்கா தம்மைக்

கோலமுடன் அழைத்திங்கு வருக” வென்றே

கொள்கையுடன் கூறியவர் அனுப்பி வைத்தார்;

நீலவிழி வரக்காவும் அம்மையார்பால்

நெருங்கி, “எனை ஏன் அழைத்தீர்?” என்று கேட்டார் 28

வரக்கா விடை கூறினார்

பெருமலையில் நடந்த அரும்புதுமை எல்லாம்

பீடுடையார் தம்மிடத்தில் எடுத்துச் சொல்ல

அருமையுடன் கேட்டிருந்த இப்னு நௌஃபல்

அடிமனத்தில் எழுந்தஅதன் உண்மை தன்னை

நறுமணத்தார் முகம்மதுவின் முகத்தை நோக்கி

“நாயகரே! உம்பெருமை மாண்பை எல்லாம்

தருஞ்சிறப்போ எனக்கில்லை இருந்தபோதும்

தயங்காமல் கூறுகிறேன் கேட்பீர்” என்றார். 29