பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்123


கதீசா - பாத்திமா இணைந்தனர்

ஐயன் சொன்ன அருளுரையை அகத்தில் ஏற்ற அந்நிலையே
உய்யும் கலிமா உரைத்துப்பின் உரிய கதீசா பாத்திமாவும்
வையம் வளர்க்கத் தோன்றியதாம் வளரும் இசுலாம் அருள்நெறியில்
ஐயம் இன்றி இணைந்தனரால் அரியோர் போற்றப் பின்னாளே! 38

அபூபக்கர் கண்ட கனவு

ஒழுக்கம் விழுப்பம் உடையவராம் உயர்ந்த சான்றோர் அபூபக்கர்
அழுக்காறில்லார் ஈகையுடன் அன்பும் உடையார் ஒருநாளில்
முழுக்கத் தூக்கம் தூங்குகையில் முளைத்த கனவில் சூரியனும்
பழுத்த பழம்போல் திங்களுடன் மடிமேல் அமரக் கண்டார்கள். 39

யீறா மலைச் செய்தி கூறினார்

புதுமையான இக்கனவின் பொருளை அறியாப் புதிர்நிலையில்
எதுவும் எவர்க்கும் உரையாமல் இனியார் நபியார் இடம் சேர்ந்தார்
முதியோர் தம்மை முறையோடு முன்னே அமர வைத்தவர்கள்
புதுமை யீறா மலைநிகழ்ச்சி புரியும்படியாய்ச் சொன்னார்கள்; 40

புதுமைகள் செய்தவர் நீர்

எல்லாம் கேட்ட அபூபக்கர்; ஏதும் இல்லாப் பாலையில் நீர்
வெள்ளம் தன்னை வரவழைத்தீர்; வெய்ய தான பாம்பொன்றைக்
கொல்லத் துரும்பைக் கையாண்டீர்; கொடியோன் கல்லில் ஒட்டியகை
புல்ல மீண்டும் சரிசெய்தீர் புரிந்த புதுமை பலவாகும்; 41

கலிமாவை ஓதுக

இனியன் இறைவன் நபிப்பட்டம் இதயம் கனிந்தே ஈந்துள்ளான்
தனியன் வாழ்க எனச்சொன்ன தக்கோர் அபூபக் கர்நோக்கித்
“துணிவாய் இசுலாம்நன்னெறியைத் தொட்டுத் தொடர்ந்தால் யான்மகிழ்வேன்
பணிவாய் மொழியால் கலிமாவைப் பகர்வீர்” என்றார் தகவோரே. 42

புதுமை ஒன்று செய்க

முன்னர் வந்த நபியார்கள் முனைந்து செய்த புதுமைபோல்
நன்னர் புரிந்து நான்காணும் நலத்தை ஈங்குச் செய்வீரேல்
கன்னல் விரும்பும் யானைபோல் கடிதில் இணைவேன் என்றனரே;
மன்னர் அதனைக் கேட்டவுடன் மனத்தில் ஊக்கம் மிக்கவராய்; 43