பக்கம் எண் :

124துரை-மாலிறையன்

கனவைக் கண்டீரா?

“ஐயா இந்நாள் இரவுதனில் அரிய கனவைக் கண்டீரோ?
மெய்யா? பொய்யா? மேதினியில் மேவும் திங்கள் சூரியனும்
பொய்யாத் தங்கள் மடிமீதில் பொருந்தக் கனவைக் கண்டீரோ?
கையார் வரத்தார் இதைக்கூறக் கனிந்த மனத்தார் அபூபக்கர்; 44

நம்பிக்கை கொண்டார்

“எவர்க்கும் இதனைக் கூறவில்லை; எங்ஙன் இவர்தாம் உரைக்கின்றார்?
தவறே இல்லை இது புதுமை தானே என்று நவின்றாங்கே
தவத்தின் மிக்கார் நெறிபோற்றித் தணியாச் சிறப்பின் கலிமாவை
உவகையாலே ஓதிப்பின் ஒன்றி முசுலீம் ஆனாரே. 45

பலர் இணைந்தனர்

வற்றா அன்பர் அபூத்தாலிப்(பு) அவர்தம் மைந்தர் அபூபக்கர்
மற்றோர் புதல்வர் அலீஎன்பார் மக்கா போற்றும் முகம்மதுகோன்
உற்ற கலிமா ஓதிப்பின் ஒன்றுபட்டு நலம்செய்தார்
பற்றால் அடிமை மகனாகப் படிந்த நல்லோர் சைது என்பார்; 46

ஒற்றுமையுடன் வாழ்ந்தனர்

இவரே அடுத்த நல்லோராய் இசுலாம் நெறியில் ஒன்றானார்
எவரும் எங்கும் அறியாமல் இனியோர் ஐந்து வல்லாரும்
தவறே இன்றித் தொழுகின்ற தன்மை பெற்று வாழ்ந்தார்கள்
அவரா? இவரா? எனலின்றி அவரே எல்லாம் என்றார்கள்; 47

அபூபக்கர் தொடர்ந்து பணிசெய்தார்

எல்லா நல்ல பண்புகளும் இணைந்து வந்த அபூபக்கர்
அல்லா தூதர் முகம்மதுவின் அன்பில் திளைத்துத் தெளிந்தவராய்ச்
சொல்லால் செயலால் இயங்கி எந்தச் சுற்றம் நட்புக் கண்டாலும்
“கல்லார் நீங்கள் அல்லாவின் கலிமா கூற வாருங்கள்”. 48

மேலும் பலர் இணைய வேண்டினர்

வந்து சேரும் எல்லார்க்கும் வாய்மை தூய்மை நலம் தருவார்
நொந்து போகும் நெஞ்சார்க்கு நொடியில் கவலை மாற்றிடுவார்
வெந்து வீணே மாளாமல் விரைந்து வருக எனச்சொன்னார்;
அந்தப் பெரியோர் சொல் கேட்டே அரியோர் பலரும் இணைந்தார்கள். 49