பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்125


மேலும் பலர் இணைந்தார்கள்

வணிகர் அப்துல் றகுமானும் வலியோர் சுபைறு தகும்பேரும்
துணிவாய்த் தல்கா என்பவரும் தூயர் சகுது பண்பினரும்
தணியா வேட்கை உதுமானும் தலைவர் நபியார் தம்மோடு
பணிவாய் இருந்தே அல்லாவின் பண்முன் ஒன்றி இணைந்தார்கள்; 50

செபுறயீல் ஏனோ இன்னும் வரவில்லை

பலரும் வந்து சேர்ந்தாலும் பணிந்து பணிந்து கலிமாவை
நலமும் வளமும் உண்டாக நாளும் கூறி வந்தாலும்
வலமாய் அன்று மலைக்குகையில் வந்த வானோர் செபுறயீல்வான்
நிலவைப் போல வருவாரே நேரில் ஏனோ வரவில்லை? 51

வருந்தினர் நபிபெருமான்

மேலும் மறைகள் தரவில்லை; மேன்மை உரைகள் தருவாரே;
நாலு வகையாம் நன்னெறியை நன்கு கூறித் தெளிவிப்பார்
காலை மாலை இரவெல்லாம் கருத்தாய் நோக்கிக் காத்திருந்தும்
மேலோர் வரவே இல்லை” என மீண்டும் மீண்டும் இவை கூறி; 52

வானையே நோக்கிக் கிடந்தார்

உறங்கார்; உண்ணார்; யாதொன்றும் உரையார்; நெருங்கார்; எவரோடும்
அறங்காண் முறையும் பேசாமல் அன்பால் கலந்து மகிழாமல்
திறங்காண் இறைவன் அறிவிப்பைத் தேடித்தேடி அலைந்தார்கள்;
மரங்காண் மலைகான் இடமெல்லாம் வானே நோக்கிக் கிடந்தார்கள். 53

கதீசாவிடம் உரைத்தார்

அறிவும் பணிவும் அன்புரையும் அமைந்த கதீசா அம்மையிடம்
வறியார்போல எதிர்நின்று வருந்தி இதனை உரைத்தார்கள்
நெறியால் வரைந்த ஓவியந்தான் நீர்க்குள் கலங்கல் போல்ஆனார்
பொறிஆள் மெய்யும் உயிர்தானும் பொலிவே இன்றி இளைப்பானார்; 54

மேலும் மேலும் இளைத்தார்

வாடும் பயிர்தான் நீரின்றி வறிதே மாளும் அதுபோல
நீடும் கவலை நெருக்கிட ஓர் நிலையில் நில்லா மனத்தோடும்
ஈடும் எடுப்பும் இல்லாதோர் இறைவன் நினைவே இயக்கிவிடக்
காடும் மாலையும் சூழ்ந்த ஒரு கல்மேல் இரவில் நின்றார்கள்; 55