பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்127


உலுசெயும் முறை கற்பித்தார்

“தொழுகை முன்னர்த் தூய்மையது துலங்க வேண்டும்” எனக்கூறி
முழுதும் உடல்மாசு அகற்றிவிடும் முறையாம் “உலு”வைச் செய்த பின்னர்த்
தொழுகைத் தலைவர் “இமாம்” என்னும் தூயர் ஆன செபுறயீல்
வழுவில் தொழுகை கற்பித்து வானில் ஏறிப் போனாரே! 61

நபியார் கதீசா அம்மைக்குக் கற்பித்தார்

தொழுகை கற்ற விழுமியவர் தோன்றல் நபியார் விரைந்துசென்று
பழுதில் தொழுகை செயும் முறையைப் பண்பார் கதீசா அம்மைக்கு
முழுதும் அருளால் கற்பித்தார் முன்னே உலுவும் செய்வித்தார்
எழுத இயலா ஓவியமாய் இருந்த அம்மை தொழுதாரே! 62

மற்றவர்க்கும் தொழக் கற்பித்தார்

பெருமான் தோழர் அந்நிலையில் பெருகும் ஆர்வத் துடன்வந்தார்
அருமாண் புடைய தொழுகையினை அரியோர் வானோர் தெரிவித்தார்
திருமாண் புரையாம் “முசம்மி” லெனும் தெளிவாம் தொழுகை கற்பித்தார்
வருமாண் புடையீர் நீவீரும் வந்தீர் தொழுக” என்றாரே! 63

மறைவிடத்தில் தொழுகை நடத்தினார்

நல்லார் சூழ எல்லாரும் நன்றே இறைவன் புகழ் கூறி
வல்லார் தொழுகை வழிகாட்ட வணங்கி வணங்கி எழுந்தாரே
பொல்லாப் பாவம் புவிவிட்டுப் போக வேண்டும் வேட்கையராய்ப்
பல்லார் காணும் வகையின்றிப் பதமாய்த் தொழுது வந்தாரே! 64

***