பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்129


நபிபெருமானோ மீண்டும், மீண்டும் உரைத்தார்

போகட்டும் எனவிடுத்தார் சிலபேர்கள் ஆனாலும் புதுமை கண்டு
வேகத்தம் நெஞ்செல்லாம் பகைமையினை வெளிக்காட்டி வெறுப்புக்காட்டி
நோகத்தான் சொல்கூறி வருபவர்முன் தீன்இசுலாம் நோக்க மாந்தர்
பாகுள்ள மொழிகலந்து பணிவுடனே அல்லாவின் பண்பே சொன்னார்; 6

சகுது நல்லார் தொழுதார்

தடக்களிறு போல்வீரம் உடையரான அறநெறியார் சகுதுநல்லார்
அடக்குமுறை பலஇருந்தும் அச்சமின்றி நீர்நிலையின் அருகில் சென்று
ஒடுக்கமுற இறைவணக்க ஒழுக்கமுறை தனில் நின்றார் ஓடிவந்து
தடுக்கவந்த பலரிணைந்து தகுதியிலா உரைபகர்ந்தார் தக்கோர்முன்னே; 7

நபித்தோழர் அல்லாவின் பெருமையே பேசினர்

இனித்தபடி தனித்தலைவன் புகழ்நினைந்து தொழுகின்ற எழிலைக்கண்டும்
மனித்தமனக் கயமையினால் பலர்வந்தே அவர் உள்ளம் மாற்ற வேண்டித்
தனித்தனியே பேசிவரச் சகுதென்னும் அக்கோமான் தாழ்மை யோடு
தனித்தலைவன் அல்லாவின் நபித்தூதர் அரியபுகழ் தனையே சொன்னார். 8

வந்தவர் அல்லாவை இகழ்ந்தனர்

அறிவுரைகள் சொல்வதுபோல் அல்லாவின் நலமிகழ்ந்தார் ஆங்கே நல்ல
நெறிமுறைகள் சொல்வதுபோல் நபியாரின் வினைஇகழ்ந்தார் நேர்மையற்று
விரிவுரைகள் கூறுபவர் செயல்முன்னே சகுதுநல்லார் “விழையும் உங்கள்
உருவணக்க முறை வைத்துப் பல்லுருவம் வணங்குவதை ஒழிப்பீர்” என்றார். 9

சகுது நல்லார் கொதித்தார்

தீன்நெறியை நாடாதோர் நரகடைவர் எனச்சொன்ன சிறந்தார் சொல்லை
வான்நெறியை உணராதோர் கேட்டவுடன் வசைகூறி வள்ளல் தம்மை
“ஏனிதனைச் சொன்னீர்கள்?”என வெகுண்டு சூழ்ந்தபடி எதிர்க்க வந்தார்
கோன்நினைவில் இருந்தவரோ அச்சமின்றி வீரத்தால் கொதித்து எழுந்தார். 10