பக்கம் எண் :

130துரை-மாலிறையன்

ஒட்டக எலும்பால் அடித்தார்

ஒட்டகத்தின் எலும்பொன்றைக் கண்டெடுத்து நபித்தோழர் ஓங்கிஅந்த
முட்டவந்த கூட்டத்துள் முன்னின்றோன் தன்தலையில் முயன்றடித்தார்
வெட்டவெளி எலாம்குருதி சொட்ட அங்குக்கண்டோர்கள் வீரம் காட்ட
ஒட்டி அவன் வந்தசில நடுநிலையர் விலக்கிவிட ஒதுங்கிப் போனார். 11

இசுலாம் பரவியது

இத்தகைய நிகழ்ச்சியினால் எவ்விடத்தும் செய்தியேக இனிய மண்ணில்
வைத்த கொடி வேர்விட்டுப் படருதல்போல் தீன்இசுலாம் வளர்ச்சி ஓங்கப்
பொய்த்த மனத்தால் உருவம் வணங்கிடுவோர் எதிர்ப்பதுதான் பொருந்த நாளும்
மெய்த்தவழும் திருக்குர்ஆன் செழுமையினை நபிஎம்மான் விளைத்து வந்தார்.12

அபூத்தாலிப்பு உதவியாக வந்தார்

பெருத்தமனப் பகைகொண்டோர் பலர்கூடி முகம்மதுவைப் பேசித்தாக்கும்
கருத்துடனே வந்தவரின் கருத்துகளைக் கரைவித்துக் கனியப் பேசித்
திருப்பி அவர் தமைவிலக்கும் நல்வினைகள் பலசெய்தார் சிறந்தார் போற்றி
விருப்பமொடு பழகுகிற அபூத்தாலிப் பென்கின்ற வெற்றி வேந்தர்; 13

அபூத்தாலிப்பிடம் குறை கூறினார்

பன்னெடுநாள் பகைகாட்டிப் பயனொன்றும் அடையாத பண்பில்லார்கள்
மன்னிடுவான் புகழ்கொண்ட முகம்மதுவின் பணிநீக்க மலைந்து நின்று
பொன்னிகர்த்தார் அபூத்தாலிப் பிடம் வந்தே பெருமையுடன் புகழ்ந்து பேசி
மன்னவரே முகம்மதுவின் செயல்பாரீர் எனப்பேசி வருந்தி நின்றார். 14

உம்தம்பி மகனைக் கண்டித்து வைப்பீர்

அடக்கத்தால் ஆற்றலினால் மிகுந்தநும் தம்பியவர் அருமைதன்னை
முடக்கத்தான் ஒருபிள்ளை முகம்மதுவாய்ப் பிறந்தானோ முன்னேவந்து
தொடக்கத்தால் நாம்வணங்கும் இறைவணக்க முறைகளையே தூற்றிச்சொல்லும்
இடக்கைத்தான் என்றென்றும் கேட்கின்றோம் இதுசெய்தல் இனிமை ஆமோ? 15