பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்131


எங்களை மதிப்பதில்லை

பெரியோரை மதிப்பதில்லை பெற்றோர்கள் நீங்களெல்லாம் பேணிக்கொண்ட
அரிதான தெய்வத்தை அணுவளவும் மதிப்பதில்லை அடக்கமின்றிப்
பெரிதான தெய்வத்தைக் கண்டவன்போல் பேசுகிறான் பெற்ற உங்கள்
மரியாதை அனைத்தினையும் மாய்க்கின்றான் இது நன்றா? மதித்துச் சொல்வீர்” 16

சொல்வது எங்கள் கடமை

தங்கள்சீர் முகத்துக்கும் தம்பிஅப் துல்லாவின் தகுதிக்கும்தான்
எங்களவர் பொறுத்திருந்தார்; இனிமேலும் பொறுப்பதில்லை இனியகூறிச்
செங்களமே உருவாகும் நிலைநீக்கி நலம் செய்யச் செப்பி விட்டோம்
எங்களது கடன்சொன்னோம் எனக்கூறிச் சினத்தாளர் இரைந்து சென்றார். 17

தீயோர் வெகுண்டனர்

ஈச்சிறகா மலை அசைக்கும்? எறும்பதுவா கடல்கடக்கும்? இந்த மக்கள்
பேச்சுசுளா பெருமானின் உளம் அசைக்கும்? இனிமையுறப் பிறக்கும் வாய்ச்சொல்
தீச்சுடரால் தீன்இசுலாம் ஒளிபரவ இதைக்கண்டு திகைத்தவர்கள்
வீச்சரிவாள் விதை வீசி விழிக்கனலின் புனல்வார்த்தார் விளைவுநோக்கி; 18

நபியார் தொடர்ந்து திருக்குர்ஆன் ஓதினார்

எப்போதும் இறைநினைப்பே மேலோங்கச் செபுறயீல் இறங்கி வந்தார்
ஒப்பில்லாத் திருக்குர்ஆன் உரைவழங்கிப் போனார்கள் உலகோருக்கே
தப்போதப்(பு) எனக்கூறித் தம்பட்டம் கொட்டிவந்து தடுத்து நின்றார்
வெப்புள்ளம் கொண்டவராய்த் தீன்நெறியை அழித்துவிட வேண்டினாரே. 19

முகம்மது தவறான போதனை தருகின்றார்

பெருஞ்செல்வக் கதீசாவின் பொருள்பெற்ற கணவனெனும் பெருமையாலோ
அருஞ்சாதி வலியாலோ அறிவிலார்செய் உதவிகளின் ஆற்றலாலோ
பெருஞ்சாதனைபுரிந்த தாய்எண்ணி வாழ்கின்ற பிழையினாலோ
தரும்போதனையாவும் தவறாகத் தருகின்றான் தகுதி அற்றே! 20

மீண்டும் கூறி விட்டோம்

மீண்டுமொரு முறைசென்றே அபூத்தாலிப்பு அரியரிடம் மேவிச்சொல்வோம்
வேண்டியதைக் கேட்டவர்கள் முகம்மதுவைத் திருத்திவிடின் விலகிக் கொள்வோம்
நீண்டுசெயும் பணியதனை நிறுத்தாமல் தொடர்ந்து செயின்நேரில் சென்று
தீண்டுகிற பாம்பைப் போல் ஆகிடுவோம் எனச்சொல்லிச் சேர்ந்து போனார்; 21