பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்133


அம்மாறாவிற்கு முகம்மதுவைக் கேட்டார்கள்

எனமுடிவு செய்தவராய்ப் பொய்ந்நெறியார் எல்லாரும் இணங்கிஒன்றி
மனமதனில் தூய்மையுள அபூத்தாலிப்பு இனியரின்பால் வந்து சொன்னார்
இனமதனால் இவர்இதனை ஏற்பார்கள் எனஎண்ணி இயம்ப, நல்லார்
சினமதனை உள்மறைத்துக் கொண்டவராய் வந்தோர்முன் சிரித்துப்பேசி; 28

ஆ! ஆ! அருமையாகச் சொன்னீர்

ஊர்ப்பெரியீர் உரைத்தவெலாம் உண்மையிலும் பேருண்மை உற்ற என்றன்
சீர்த்திகழும் தம்பிமகன் முகம்மதுவைத் தந்து விட்டுச் சிறப்பு மிக்க
பேர்த் திகழும் “அம்மாறா” என்பவனைப் பெறவேண்டும் பெருமையாக
ஆர்த்திங்கே வந்தீர்கள் அருமொழியே கூறிவிட்டீர் ஆ! ஆ! என்றார். 29

இதை மட்டும் செய்ய மாட்டேன்

இதைவிட ஓர் அறமுண்டா? திறமுண்டா? நேர்மையுளோர் இயம்பிவிட்டீர்
கதைவிடுதல் போல்சொன்னீர் களிப்புமொழி புகன்றுவிட்டீர்
பதைபதைக்க முகம்மதுவை அனுப்பிவிடச் சொல்லுகிறீர் பரிவுநீங்கி
அதைமட்டும் செயமாட்டேன் எனக்கூறி அனுப்பிவைத்தார் அபூத்தாலிப்பே!30

நபித் தோழர்களைத் தாக்கினார்

விடைஇதனைக் கேட்டுடனே விலகியவர் ஒன்றாகி வீரம் கூட்டிக்
குடைநிழலாய் முகம்மதுவின் உடனுள்ளார் இடத்தையெல்லாம் கூடித்தாக்கிப்
படைஎடுக்க அபூத்தாலிப்பு இதுகண்டு சினமுற்றார்; படையைத்தாக்க
உடனிருக்கும் நாலுவகை இனத்தாரை வரவழைத்தே உரைவிரித்தார்; 31

சிலர் ஒப்புக் கொண்டனர்

ஒத்தவர்கள் இருதிறத்தார் ஒப்ப மற்றும் இருதிறத்தார் ஒப்பவில்லை
முத்தலிப்புக் கிளையாரும் நல்ஆசீம் கிளையாரும் முழுதும் ஒப்பத்
தத்தளித்த சம்சுவோடு தனிநௌபல் கிளையாரும் தாம் ஒப்பாமல்
பித்தனெனும் அபூலகுபும் பிரிந்தேகிப் பகையோர்கால் பிடித்து வாழ்ந்தார். 32

பகைவர்கள் கொண்ட மகிழ்ச்சி

பழுத்தமன அபூத்தாலிப்பு இதற்குமனம் கலங்காமல் படர்ந்தபோதும்
அழுத்தமனப் பகைவர்கள் அனைவருமே ஒன்றாகி அழிந்த நெஞ்சால்
வழுத்தவரும் “ஹஜ்” பயணக்காலத்தில் முகம்மதுவின் வரட்டுப் பேச்சை
அழித்துவிடும் நிலைவளரும் எனக்கூறித் தமக்குள்ளே அகம் மகிழ்ந்தார். 33