பக்கம் எண் :

136துரை-மாலிறையன்

அக்கம் முகம் அவ்வாறே மாறியது

அன்றுமவன் அவ்வாறே முகந்தன்னால் பழித்திருக்க அன்புக் கோமான்
“என்றுமிது செய்கின்றாய் இதையேநீ விரும்புகிறாய் போலும்” என்று
“நன்றுநன்று நின்முகம்தான் அவ்வாறே ஆக” என நவின்று போனார்
அன்றுமுதல் அவன் உருவ வணக்கத்தில் நின்றபோதும் அவ்வாறானான். 46

மருத்துவத்தால் பயனில்லை

அதுமுதலாய் அக்கம்தன் இறைஉருவம் முனும் தன்சீர் ஆசான் முன்னும்
புதுமுறையாய் முகம்காட்டிப் பழிக்கும் உருவே பெற்றான் புதுமை ஆனான்
எதுவரையில் மருத்துவர்கள் மந்திரங்கள் உள்ளனவோ எல்லாம் பார்த்தும்
அதுநலமாய் ஆகவில்லை இடக்கையால் உணவுண்டும் அகம்நொந்தானே! 47

சாவளவும் திருந்தாதவன் அக்கம்

காவலனார் அக்கம்முன் வந்தொருநாள் “தம்பீ! நீ கலக்கமின்றி
ஆவலுற வலக்கையால் உண்க” என்றார் அன்னவனோ ஐயன்தன்பால்
“நாவலரே இடக்கையால் பழக்கமுளேன் வலக்கையோ நடுங்கும் என்று
சாவளவும் திருந்தாதான் பொய்யுரைத்தான் நாவலரோ, “சரியே” என்றார். 48

செபுறயீல் இசுலாம் நெறியைப் பரப்புக என்றார்

நன்னெறியில் நில்லாதோர் அக்கம்போல் பற்பலரும் நாளும் நாளும்
புன்னிலையே அடைந்தார்கள் புகழ்நபியார் அருகோர்நாள் பொன்வான் மன்னர்
தன்னிகரில் செபுறயீல் விரைந்தணுகி வந்துடனே சலாமும் சொல்லிப்
பொன்னுளத்தீர்! உறவினரை இசுலாமில் “சேர்க்க” எனப் புகன்று போனார். 49

சபா மலைக்குன்றின் மேல் நபிகள் நாயகம்

வான்அரசர் போனதன்பின் அருளாளர் முகமதியார் மகிழ்ச்சி கொண்டு
தேன்வழங்கு சபாமலைக் குன்றத்தின் முடி ஏறித் தெளிவு தோன்ற
மான்வழங்கு சோலை சூழ்ந்த மக்கமா புரம் நோக்கி “மாண்புள்ளோரே!
வான்வழங்கி உள்ளதைநான் வழங்கவந்தேன் எல்லீரும் வருக” என்றார். 50

மலைக்குப் பின்னால் உம்பகைவர் உள்ளார்

நாயகரின் குரல்கேட்டு நாலுதிசை இருந்தவரும் நாடி வந்தார்
நேயமுள குறைசியரே மலைக்குப்பின் உமைத்தாக்க நெடிய வீரம்
மேயஒரு படை உள்ளதெனச் சொன்னால் நம்புவீரோ விளம்பு கென்றார்
ஆயவர்கள் அனைவருமே ஒரே குரலில் நம்பிக்கை அடைந்தோம் என்றார். 51