பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்137


அபூலகபு தூற்றினான்

நேயரவர் உரைகேட்டு நேரெழுந்து வந்தமக்கா நெடியோர்க்குள்ளே
தீயவனாம் அபூலகபு எனும்ஒருவன் சினமுற்றுத் “தீன்கொள் கை” யை
நேயமுடன் ஏற்றிடுக என்பதற்கா இவ்விடத்தில் நின்றழைத்தீர்
தூயவரா நீர்?” என்று தூய்மையிலான் மண்வாரித் தூற்றி விட்டான். 52

தீமை வந்தாலும் துவள மாட்டேன் என்றான்

அந்நிலையே அபூலகபு புல்லியன்தான் இருமையிலும் அழிவே ஏற்பான்
என்னுமொரு திருக்குர்ஆன் ஒருநூற்றுப் பதினொன்றாம் இயலின் கூற்றை
மன்னியசீர் அறிவிப்பாய் முகம்மதுவும் வரப்பெற்று வாய்மலர்ந்தார்
சொன்னஉங்கள் சொல்லதுபோல் சூழ்தீமை எனக்குவரின் துவளமாட்டேன். 53

செல்வத்தால் என்னைப் பாதுகாத்துக் கொள்வேன்

தேடிவரும் இடர்நீக்க வல்லார்க்கே என்றன்கைச் செல்வம் தன்னால்
ஓடிவிடும்படி அந்த உறுதுன்பம் அத்தனையும் ஒழித்துச் சாய்ப்பேன்
கூடிவிட மாட்டேன் உம்பொய்க்கொள்கையினில் என்று கூறினான் ஆங்(கு)
ஆடிவரும் பாம்பெனவே அழிநச்சு மனம்கொண்ட அபூல கப்பே; 54

நபியின் அன்பர்களுக்குத் தொல்லை கொடுத்தனர்

தூதர்பிரான் தம்துணையாய் அபூத்தாலிப்(பு) இருக்கின்றார் துன்பம் தந்தால்
காதலினார் கடுஞ்சினத்துக்(கு) ஆட்படுவோம் என்றஞ்சிக் கயவர் கூட்டம்
ஆதரவு தந்திருக்கும் அருமுசுலிம் அன்பர்களை அழித்துச் சாய்க்கச்
சோதனைகள் பலதரவும் சொத்துகளை அழித்திடவும் சூழ்ச்சி செய்தார். 55

நீங்கள் எல்லாம் ஆண்பிள்ளைகளா?

மாண்பில்லா முகம்மதுவின் மயக்குரையை நம்பிநம்பி மதிக்கின்றீரே
ஆண்பிள்ளை களாநீவிர்? அறிவில்லையா? என நெஞ்(சு) அழியப் பேசிக்
காண்பிள்ளைகளை எல்லாம் கண்டபடி ஏசிஏசிக் கலங்கச் செய்து
தீன்பிள்ளை களோநீவிர்? தீயத்திடுவோம் உமை” என்றே சிறுமை செய்தார்.56

அல்லா பேரைச் சொல்வார்க்குத் தொல்லை பெருகின

இகழ்ந்திடுவார் சிலரை ஆங்(கு) எரித்திடுவார் அவர் வாழும் இடத்தை எல்லாம்
அகழ்ந்திருக்கும் பள்ளத்தில் அவர்களை உள்தள்ளிடுவார் அல்லாபேரைப்
புகழ்ந்திடுவார் தம்நாவைப் பொசுக்கிடுவோம் என்பார் தீப்புன்மைச் சொற்கள்
பகர்ந்திடுவார் சிலபேர்கள் பதறுகிற வரை செய்வார் பரிவில் லாரே! 57