அனைவரையும்
பிரிந்த அம்மாறுவின் தவிப்பு
அடுத்தடுத்த
தீவினையால் அகம்குளிர்ந்த நெறிகேடர் ஆங்கே
செய்த
வடுச்செயலால் தனிவீர யாசிறொடும் அவர்பயந்த மடந்தை யாரும்
உடுத்திகழும் வானுலக உரிமைபெறப் போனார்கள் ஒன்றியாகிப்
படுத்தவண்ணம் இருந்தவராம் அம்மாறா தீயவரைப் பார்த்துச் சொன்னார். 64
பொய்மையும் வாய்மை
இடத்த
பொய்ம்மையதும் தீமையிலா நன்மைசெயின் வாய்மைஎனப் புகன்றார்
நல்லோர்
மெய்ம்மைஇது போல்யானும் தீயவரினின்றுதப்ப விளம்புகின்றேன்
“ஐய! எனை மன்னிப்பீர்” என நெஞ்சால் தமக்குரைத்தே அவரை நோக்கிப்
“பொய்யுரைக்கும் முகம்மதுவைப் பொருந்துகிலேன்
ஐயாவே பொறுப்பீர்”என்றார். 65
திருந்தி
விட்டான் என்று விட்டனர்
“உடல்துடிக்க உதைத்ததனால் ஒருவாறாய் இவன்மட்டும் உள்ளம்மாறி
மடம்நீங்கித் திருந்தியுளான் மன்னிப்போம்” எனக்கூறி மதித்துவிட்டார்
உடன்நல்ல அம்மாறு மண்நீங்கி விண்ணகமே உற்றார் போலக்
கடன்புரிய வந்த நபித் தூதர்முன் போய்நின்று கலங்கிச் சொன்னார். 66
அடிக்கஞ்சிப் பொய் சொன்னேன்
ஐயா!
“அடிக்கஞ்சி ஆருயிர்மேல் இருக்கின்ற ஆசையினால் ஐய உம்மைக்
கடிக்கின்ற நாயானேன் கொடியர்களால் பாம்பானேன் கனிவில்லாமல்
நடிக்கின்ற தாய் எண்ணி நன்றியிலாச் செயல்புரிந்தேன் நல்லீர் என்னைப்
பிடிக்கின்ற தோ?இலையோ? நும்பண்பால் எளியேனைப் பேணிக்காப்பீர்”67
அம்மாறுவை
ஆறுதல்படுத்தினார்
பெருமகனார்
மனம்கனிய அம்மாறு பணிந்திரங்கப் பெருமான் கண்டு
திருமகன்நீர் பகைவர்கள் செயும்கொடுமை நீங்கஇதைச் செய்ததாலே
ஒருவருமே தவறெனவே உரைசெய்யார் ஈங்கென்றே ஒளியர் ஆனார்
அருமைஉரை செய்திட்டார் அதுகேட்ட அம்மாறும்
அமைதி ஆனார். 68
அடிமை பிலால் தன்னை இப்னுகலபு
ஏசினான்
கருப்பினத்தார் ஆனபிலால் இப்னுகலப்படிமை எனக் களைத்து வாழ்ந்தார்
விருப்பமுடன் தீன்நெறியைக் கடைப்பிடித்துச் சிறந்திட்டார் வெறுப்புக் கொண்ட
செருப்பகைவன் இப்னுகலபு இதுகேட்டுக் கொதித்துரைத்தார் சினம் தனக்குப்
பொறுப்புடையான் முகம்மதுவே எனப்பேசிப் பொறைஇழந்தான் பொறாமையாலே!69
|