பக்கம் எண் :

140துரை-மாலிறையன்

பிலாலைக் கொடுமைப் படுத்தினான்

“என்னிடத்தில் இருப்பவன்நீ வஞ்சித்து முகம்மதுவை ஏற்றாய்” என்று
சொன்னதொடும் பிலால்தன்னைச் சுடுகின்ற பாறைமேல் தூக்கிப்போட்டும்
என்னவகை இடுக்கண்கள் இயற்றஉண்டோ அவற்றைஎலாம் எண்ணிச்செய்தான்
பன்னருஞ்சீர் அரியபிலால் இதற்கெல்லாம் அஞ்சவில்லை பணியவில்லை.70

அபூபக்கர் தடுக்கவந்தார்

நடுக்கமுற இடர்விளைத்தும் நல்லபிலால் தன்னெஞ்சில் நட்டகொள்கை
விடுத்துவிட எண்ணாத வீரத்தை அபூபக்கர் விளங்கிக் கொண்டு
தடுத்துவிடும் எண்ணத்தால் தான்விரைந்தார் தீயவனோ தடுக்கநீர்யார்?
கொடுத்துவிடுவீர் அடிமைப் பணத்தைஎனில் அனுப்பிடுவேன் உடனே”
என்றான். 71

அடிமை பிலாலைப் பணம் கொடுத்து வாங்கினார்

பணத்தைவிட மதிப்புடைய பிலால்தன்னை அபூபக்கர் பணத்தின் மிக்க
மனத்துடனே வாங்கிவிடு தலைதந்தார் அன்னவாறே கொள்கைகோடா
மனத்துடைய அடிமைகளைத் தொகைதந்து மீட்டுவிட்டு மாண்புமிக்க
இனத்தவராம் குறைசியர்கோன் கூறுநெறி பரவவைத்தார் இனியர்தாமே. 72

அமுசா வேட்டை ஆடிவந்தார்

கானகத்தில் வேட்டையாடிக் கைப்பிடித்த வில்லோடும் களித்துவந்த
மானமெலாம் நிறைஅமுசா மாந்தரினை நேர்கண்டாள் மங்கைஅந்நாள்
தேனவளோ இளநங்கை அப்துல்லா இபுனுசத்தான் திகழ்இல்லத்தில்
தான்அடிமை ஆனவளாய் வினைபுரிந்து வந்தவளாம் தகுதியாலே! 73

முகம்மதுவை அபூசகுல் திட்டினான் என்றார்

புடைத்ததோள் அமுசாவை நேர்கண்ட அப்பெண்ணாள் பொருந்திநின்று
படைக்கையில் வைத்திருக்கும் ஐயன்மீர் என்னுடைய பணிவை ஏற்க
கொடைக்கையர் உம்முடைய உடன்பிறப்பாம் முகம்மதுவைக் கொள்கையில்லாக்
கடைமகனாம் அபூசகுல் கனிவில்லாச் சொற்களினால் கடிந்து ரைத்தான். 74

அமுசா இது கேட்டுக் கொதித்தெழுந்தார்

மாண்பினரோ யாதொன்றும் புகலவில்லை மதிப்புடைய மாந்தர் பொன்செய்
தூண்எனவே நின்றிருந்தார் தூயமுகம் பொலிவுறவே தொலைவில் சென்றார்
நானதனைக் கண்டதனால் நவிலுகிறேன் என உரைத்தாள் நங்கை யாளே
ஆண்அவரோ அதுகேட்டு வெகுண்டெழுந்து படையோடும் ஆங்கே போனார்.75