பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்141


அமுசா அபூசகுல் மண்டையில் அடித்தார்

போனவுடன் அபூசகுல் முன்அமுசா எதிர்நின்று பொங்கி வந்த
ஆனைஎன அருங்குரலால் அதட்டியுடன் முகம்மதுவின்அருமை கூறி
“மானமறப் பேசியதும் ஏன்? என்று கேட்டவராய் மணிக்கை கொண்ட
கூனுடைய வில்லதனால் அவனுடைய மண்டையின்மேல் கொடுத்தார் ஒன்றே!76

நான் இப்போதே கலிமா ஓதிவிடுவேன்

மூத்தவரின் நிலைஅறியா முறையில் நீ பேசிவிட்டாய் மோழைபோல
மாத்தவறு செய்துவிட்டாய் ஆகையினால் இப்பொழுதே மானம்காக்க
காத்தவர் தம் கலிமாவை ஓதியானும் தீன்நெறியில் கலந்து கொண்டேன்
வேர்த்திடுநீ” எனக்கூறி வீரஉரை புகன்று அமுசா விரையக் கண்டே; 77

அமுசா முகம்மது நபியைச் சென்று கண்டார்

கொதித்ததன் இனத்தாரின் கொதிப்புதனை அபூசகுல் குறைய வைத்து
மதிப்பவன்போல் மனம்மாறி விட்டவன்போல் உரைசெய்து மலையவந்த
புதுப்போரைத் தோன்றாமல் தடைசெய்தான் அமுசாவோ பொறுத்தவண்ணம்
மதுப்போன்ற இன்னுரைசெய் முகம்மதுவின் இடம்சேர்ந்து மயங்கிநின்றார்.78

அமுசா நபியார் முன் சென்று கலிமா ஓதினார்

மயங்கியவர் மனத்தாலே முகம்மதுசொல் கலிமாவை மனத்தால் ஏற்று
நயங்களுற நல்லுரைகள் பற்பலவும் வரப்பேசி, நல்சீர் பெற்றார்
தயங்கியபுன் மனத்தவராம் தகுதியிலா நெறிகேடர் செய்தி கேட்டார்
இயங்கிடவும் முகம்மதுவை எதிர்த்துமொழி இயம்பிடவும் இயலாதானார்;79

நபியார் பெருமை உரைத்தல் அரிதே!

அன்பான பார்வையினால் அருங்களிறும் தானடங்கும் அருமைபோல
வன்பான நெறிசென்ற அமுசாவும் வாய்மைநலார் வழியில்நின்றே
பின்போன பெருமையது பேருலகில் நடப்பித்த பெம்மான் தம்சீர்
என்போன்ற எளியாரால் எடுத்துரைக்க இயலாதே இம்மண் மேலே! 80

***