பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்143


முன்வருவார்க்குப் பதவி தருவேன்

அன்னவன் தன்னை மாய்க்க ஆருக்கு வீர முண்டோ
அன்னவர் தமக்கு வேண்டும் அரும்பொருள் எதையும் ஈந்து
மன்னவர் அவரே என்னும் மாண்புறு பதவி ஈவேன்
என்னவே அபூசகுல்தான் இயம்பியே முழங்கி நின்றான். 6

வீர இளைஞரே இல்லையா?

“பணத்தொடும் பதவி தானும் பரிசாகத் தருவேன் கெட்ட
மனத்தவன் ஆன அந்த மகம்மது தன்னைக் கொன்றால்
எனத்தகாச் சொற்கள் சொன்ன இழிந்தபுன் கயவன் நந்தம்
இனத்தவர் தமக்குள் வீர இளைஞரும் இலையா?” என்றான். 7

இதோ நான் இருக்கிறேன் என்றார் உமறு

“ஏன் இல்லை?” என்று கேட்டாங்(கு) எழுந்துநேர் உமறு நின்றார்
தேன் இல்லை உயிர்எமக்குத் தேயத்தில் அச்சம் இல்லை
வான் இல்லை - அதற்கு மேலும் வலிய ஊர்ஆள் ஆனாலும்
ஊன் உடல் சிதையத் தாக்கி உயிரையும் மாய்ப்பேன்” என்றே; 8

ஆரவாரத்தோடு உமறு போனார்

இடையிலோர் குறுவாள் கையில் ஏந்திய ஈட்டி யோடும்
நடையினில் அரிமா ஏறு நல்கிய தோற்றம் காட்டித்
தொடையினில் தட்டித் தட்டித் துள்ளிய வீரம் பொங்கப்
படைஎலாம் நடுநடுங்கும் படிவீரர் உமறு போனார். 9

இறைவன் ஒரு வானவரைக் காளையாக மாற்றி அனுப்பினான்

அதிர்ந்திடத் தரைமண் எல்லாம் ஆர்த்திட உமறு செல்ல
முதல்இறை அருள் மேற்கொண்டு முறைசெய வானவர்க்குள்
பதமுற்ற ஒருவா னோரைப் பளிச்சிடும் காளை ஆக்கி
“உதவு போ! நபியாருக்கே உமறுவின் எதிர்நின்று” என்றான். 10