காளை வந்து
வழி மறித்தது
தோள்தட்டி
ஆர்ப்பரித்துத் துள்ளிய உமறு தம்மைக்
கால் கட்டி விட்டிருந்த கட்டினை அவிழ்த்தால் போல் ஓர்
காளைமுன் கால்கள் தட்டிக் கழுத்தொடு கொம்பும் ஆட்டி
வாலினை முறுக்கிக் காட்டி வழிஇடைத் தடுத்து நின்றே; 11
வானை விட்டு
வந்தது
தஞ்சையின் பெரிய கோவில் தன்னுளே இருப்ப தான
மிஞ்சிய உருவம் காட்டும் விடையது போலக் கண்டோர்
அஞ்சியே விலகும் வண்ணம் ஆர்ப்பாட்டம் விளைத்து வான
மஞ்சினை விட்டு நீங்கி மண்ணிலே நின்ற தாமே! 12
நபியை வெல்வார்
இல்லையே
கோமகன்
நபியைக் கொன்று கொடுமைகள் செய்வதற்குப்
போம்அவர் எவரும் இந்தப் பொன்னுலகத்தில் இல்லை
பூமகள் அதிர்ந்து நாணப் புறப்பட்டு வந்தார் என்று
காமர் பூங் காளை மாடு கனிவுடன் நினைத்துக் கொண்டே; 13
நீர் யார் என்முன்
வந்தீர்?
“பற்களைக் கடித்துக் கையில் பளிச்சிடும் படை பிடித்துக்
கற்களைத் தூசுகள் போல் காற்றினில் பறக்க வைத்துச்
சொற்களைக் கண்சிவந்த சூட்டினில் கலந்து கக்கிப்
புற்களை விரும்பும் என்முன் புறப்பட்டு வருகின்றீரே!” 14
போர் மேல் நாட்டம் கொண்டா
வருகிறீர்?
“உருவதில் வீரம் கொண்டும் உள்ளத்தில் ஈரம் கொண்டீர்
வருவதில் வீரம் கண்டேன் வள்ளல்போல் சீரும் கொண்டீர்
செருவதில் நாட்டம் கொண்டா செல்கிறீர்?” என்றே அந்த
எருதுதான் உமறு தம்பால் இன்னுரை யாலே கேட்க; 15
யார் பேசுவது?
மாடா பேசுகிறது?
எவருமே
நடமாடாத இடம்தனில் செவியும் கேட்க
நவிலுதல் எவரோ? என்று நாற்றிசைப் பக்கம் பார்க்க
அவரதே உரையைக் கேட்கும் அளவில்வான் மாடு மீண்டும்
நவிலவே உமறு கேட்டு நறுக்கெனத் திகைத்து நின்றார். 16
|